துருக்கி நிலநடுக்கத்தில் சிதிலமடைந்த கட்டிடங்களில் சிக்கி 22 நபர்கள் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன
துருக்கி அருகே ஏஜியன் கடல் பகுதியில் நேற்று 7.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதில் 20க்கும் அதிகமான கட்டடங்கள் சேதம் அடைந்தன. அதே போல கிரீஸ் நாட்டிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக நகரத்தின் பல பகுதிகள் புகைமண்டலமாக காட்சி அளித்தது.
நிலநடுக்கம் காரணமாக இஷ்மீர் மாகாணம் செஃபெரிஹிசர் மாவட்டத்தில் சுனாமி ஏற்பட்டது. அது தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது அமெரிக்காவின் புவியியல் மையம் வெளியிட்டுள்ள தகவலின் படி கிரீஸின் கார்லோவாசி பகுதியில் அதிகபட்சமாக 14 கிலோமீட்டருக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் சிதிலமடைந்ததில், 22 நபர்கள் பலியானதாகவும் 700க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. போர்க் கால அடிப்படையில் பணிகளை முடுக்கிவிட்டு, மீட்பு பணிகளை அந்நாட்டு அரசு செய்து வருகிறது.