உலகம்

கேதார்நாத் ஹெலிகாப்டர் விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த மூவர் உட்பட 7 பேர் பலி - காரணம் என்ன?

Abinaya

உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் இதுவரை 7 பேர் பலியாகி உள்ளனர்.

உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத் அருகே இன்று ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது. யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர், ருத்ரபிரயாக்கில் உள்ள கருட் சட்டி அருகே உள்ள கேதார்நாத் கோவிலில் இருந்து காலை 11.40 மணியளவில் புறப்பட்ட உடனேயே விபத்துக்குள்ளாகி உள்ளது. உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்பு பணியினர், விபத்து நடந்த இடத்திலிருந்து இதுவரை ஆறு யாத்ரீகர்கள் மற்றும் ஒரு விமானியின் உடல்களை மீட்கப்பட்டுள்ளனர்.

கேதார்நாத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் ஹெலிகாப்டர் தீப்பிடித்ததாகவும், தீப்பிடிப்பதற்கு முன்பு பலத்த சத்தம் கேட்டதாக விமான ஒழுங்குமுறை அலுவலகம் தெரிவித்தன.

மோசமான வானிலையால் ஹெலிகாப்டர் இயக்குவதில் ஏற்பட்ட சிரமங்கள்தான் விபத்துக்கு காரணம் என முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஆனால், விபத்துக்கான துல்லியமான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. விபத்து நடைபெற்ற இடத்தில் மீட்பு பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக உத்தரகாண்டின் உள்நாட்டு விமான போக்குவரத்து மேம்பாட்டு ஆணையத்தின் தலைமை நிர்வாகி ரவிசங்கர் தெரிவித்துள்ளார்.

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த யாத்ரீகர்கள் மற்றும் விமானிக்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர். அவர்கள் சென்னையைச் சேர்ந்த கலா, சுஜாதா, பிரேம்குமார் என்பது தெரியவந்துள்ளது.