உலகம்

இந்தோனேசியாவில் மீண்டும் நிலநடுக்கம் - 6.2 ரிக்டர் அளவு பதிவானதால் மக்கள் அச்சம்

Sinekadhara

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் திங்கட்கிழமை அதிகாலையில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.2 என பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு தெரிவித்துள்ளது.

ஆச்சே மாகாணத்தின் தென் - தென்கிழக்கு நகரமான சிங்க்கில் பகுதியை மையமாகக்கொண்டு உருவான நிலநடுக்கமானது 40 கி.மீ(30 மைல்கள்) சுற்றளவு மற்றும் 37 கி.மீ ஆழம் வரை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது எனவும் அமெரிக்க புவியியல் ஆய்வு தெரிவித்துள்ளது. உள்ளூர் நேரப்படி இன்று காலை 6.30 மணியளவில் (2230 GMT) நடந்தது. முதலில் 48 கி.மீ ஆழம்வரை 6 ரிக்டர் பதிவாகியிருந்ததாக குறிப்பிட்ட USGS பின்னர் 6.2 ரிக்டர் அளவு என அறிவித்துள்ளது.

இந்தோனேஷியா வானிலையியல், காலநிலையியல் மற்றும் புவியியல் நிறுவனமும் (BMKG) நிலநடுக்கத்தின் அளவை 6.2 ரிக்டர் என்றே கணக்கிட்டுள்ளது. அதேநேரம் சுனாமிக்கான அபாயங்கள் இல்லை எனவும் தெரிவித்திருக்கிறது. மேலும், உயிரிழப்புகளும், பெரியளவில் சேதாரமும் ஏற்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது. ”ஆச்சே மற்றும் வட சுமத்ரா மாகாணங்களின் 4 மாவட்டங்களில் 3-10 நொடிகள் மட்டுமே உணரப்பட்ட நிலநடுக்கமானது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது” என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தோனேஷியாவானது பசிபிக் "ரிங் ஆஃப் ஃபயர்" பகுதியில் அமைந்துள்ளதால் அங்கு டெக்டோனிக் தட்டுகள் அடிக்கடி மோதுகின்றன. இதனால் அங்கு நில அதிர்வு மற்றும் எரிமலை வெடிப்புகள் அடிக்கடி நிகழ்கின்றன.

கடந்த ஆண்டு நவம்பர் 21ஆம் தேதி மேற்கு ஜாவா மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 5.5 என பதிவாகி இருந்தது. இதில் 602 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல் 2004, டிசம்பர் 26ஆம் தேதி சுமத்ரா தீவில் ஏற்பட்ட சுனாமியால் 230,000 உயிரிழந்தது வரலாற்றில் மறக்கமுடியாதது.