உலகம்

பாகிஸ்தான்: மசூதியில் மனித வெடிகுண்டு தாக்குதல் ! வெள்ளிக்கிழமை நேர்ந்த துயரம்

Veeramani

பாகிஸ்தான் நாட்டின் பெஷாவரில் உள்ள மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகையின் போது நடந்த மனித வெடிகுண்டு தாக்குதலில் 57 பேர் கொல்லப்பட்டனர், சுமார் 200 பேர் காயமடைந்தனர்.

வடமேற்கு பாகிஸ்தானில் பெஷாவர் நகரில் கிஸ்ஸா குவானி பஜார் பகுதியில் உள்ள ஜாமியா ஷியா மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகை நடத்திக் கொண்டிருந்த போது நடந்த சக்திவாய்ந்த தற்கொலை குண்டுவெடிப்பில் 57 பேர் கொல்லப்பட்டனர், 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர், ஆப்கானிஸ்தானின் எல்லையில் உள்ள இந்த மாகாணத்தில் நடந்த மிக மோசமான தாக்குதல்களில் இதுவும் ஒன்றாகும்.

ஆப்கானிஸ்தானின் எல்லையில் அமைந்துள்ள கைபர்-பக்துன்க்வா மாகாணத் தலைநகரான பெஷாவரில் நடந்த இந்த பயங்கர குண்டுவெடிப்புக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது

இது தொடர்பாக பேசிய கைபர்-பக்துன்க்வா அரசாங்க செய்தித் தொடர்பாளர் பாரிஸ்டர் முகமது அலி சைஃப், இது தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதல் என்று கூறினார். இந்த தாக்குதலில் இரண்டு பயங்கரவாதிகள் ஈடுபட்டதாகவும் தெரிவித்தார்.

இந்த சம்பவத்தை நேரில் பார்த்த நபர் இதுகுறித்து கூறுகையில், "மனித வெடிகுண்டுடன் வந்த கறுப்பு உடை அணிந்த ஒரு நபர், மசூதிக்குள் நுழைந்து காவலரை முதலில் சுட்டுக் கொன்றுவிட்டு, ஐந்து முதல் ஆறு தோட்டாக்களை சுட்டு தாக்குதல் நடத்தினார். அதன் பின்னர், அவர் விரைவாக மசூதிக்குள் நுழைந்து, தொழுகை நடக்கும் போதே தன்னைத்தானே வெடிக்கச் செய்தார். இதைத் தொடர்ந்து, பலியான உடல்கள் மற்றும் காயமடைந்தவர்கள் எல்லா இடங்களிலும் கிடந்தனர்," என்று கூறினார்.

இந்த குண்டுவெடிப்புக்கு ஜனாதிபதி ஆரிஃப் அல்வி மற்றும் பிரதமர் இம்ரான் கான் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக கைபர்-பக்துன்க்வா முதல்வர் மஹ்மூத் கான் குண்டுவெடிப்புக்கு கண்டனம் தெரிவித்ததோடு, இந்த கொடூரமான செயலில் ஈடுபட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதாகவும் உறுதியளித்தார்.