உலகம்

பாகிஸ்தான் மசூதியில் தற்கொலை தாக்குதல் - உயிரிழப்பு மேலும் அதிகரிப்பு

ஜா. ஜாக்சன் சிங்

பாகிஸ்தானில் மசூதி ஒன்றில் நிகழ்த்தப்பட்ட தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் பலி எண்ணிக்கை 56-ஆக உயர்ந்துள்ளது. 194 பேர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதலை ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் நடத்தியிருக்கலாம் என அந்நாட்டு ராணுவம் சந்தேகிக்கிறது.

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள கோச்சா ரிசால்டார் என்ற பகுதியில் மசூதி ஒன்று அமைந்துள்ளது. இந்த மசூதியில் தீவிரவாதி ஒருவர் இன்று மதியம் தற்கொலை வெடிகுண்டு தாக்குதலை நிகழ்த்தினார். இந்த தாக்குதலில் அங்கு தொழுகையில் ஈடுபட்டிருந்த 30 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், சிகிச்சைப் பலனின்றி ஏராளமானோர் அடுத்தடுத்து இறந்தததால் பலி எண்ணிக்கை 56-ஆக உயர்ந்துள்ளது. 194 பேர் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. அதே சமயத்தில், ஐ.எஸ். தீவிரவாதிகள் இந்த தாக்குதலை நிகழ்த்தியிருக்கலாம் என பாகிஸ்தான் ராணுவம் சந்தேகிக்கிறது. அண்மைக்காலமாக, அந்நாட்டில் ஷியா முஸ்லிம்கள் மீது ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தினர் தாக்குதல் நடத்தி வருவதால், இந்த சம்பவத்திலும் அவர்கள் ஈடுபட்டிருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.