pregnant women in Gaza
pregnant women in Gaza  file image
உலகம்

அவதிப்படும் 50,000 கர்ப்பிணிகள்.. 15 நிமிடத்திற்கு ஒரு குழந்தை பலி..! உறைய வைக்கும் உண்மைகள்!

யுவபுருஷ்

இஸ்ரேல் ராணுவத்திற்கும் ஹமாஸ் படைக்குழுவுக்கும் இடையே நடக்கும் யுத்தமானது 14வது நாளை எட்டியுள்ளது. ஆக்கிரமிப்பு தொடர்பாக நடந்துவரும் இந்த போரில் ஆயிரக்கணக்கான அப்பாவி உயிர்கள் பலியாகி வரும் தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

அக்டோபர் 7ம் தேதி தொடங்கிய இந்த போரில் பாலஸ்தீனியர்கள் சுமார் 3000 பேரும், இஸ்ரேலியர்கள் சுமார் 1400 பேரும் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்பாக இஸ்ரேலின் கோர தாக்குதலால், காசாவில் வாழும் குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், முதியோர் என்று ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஐநா சபை வெளியிட்டுள்ள தகவல்களின் படி, காசாவில் சுமார் 50,000 கர்ப்பிணிகள் மருத்துவ உதவிகள் கிடைக்காமல் அவதியுறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிலும் அடுத்த ஒரு மாதத்தில் 5,500 பேருக்கு பிரசவம் நடக்கும் நிலையில் இருப்பதாக தெரிகிறது. பாதுகாப்பான முறையில் குழந்தை பிறப்புக்கு கேள்விக்குறி எழுவதோடு, குழந்தை வளர்ப்பும் சிக்கலுக்கு உள்ளாகியுள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது.

காசாவில் ஒட்டுமொத்தமாக 25 சதவீதமான வீடுகள் சிதைக்கப்பட்டுள்ளன. 59 மருத்துவமனைகள், 170 கல்விநிலையங்கள், குடிநீர் மற்றும் சுகாதார நிலையங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இதைவிட கொடூரம் என்னவெனில் ஒவ்வொரு 15 நிமிடத்திற்கு 1 குழந்தை பலியாகி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டும் என்பதே உலக மக்களின் ஒற்றை வேண்டுகோளாக உள்ளது.