உலகம்

ஐநா அணு ஆயுத தடை: 42 நாடுகள் கையெழுத்து

ஐநா அணு ஆயுத தடை: 42 நாடுகள் கையெழுத்து

webteam

அணு ஆயுதங்களை தடை செய்வதற்காக கொண்டு வரப்பட்ட புதிய ஒப்பந்தத்தில் 40-க்கும் மேற்பட்ட நாடுகள் கையெழுத்திட்டுள்ளன.

ஐ.நா. சபையில் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கான நிகழ்ச்சி நேற்று தொடங்கியதும், முதல் நாடாக பிரேசில் கையெழுத்திட்டது. அதைத் தொடர்ந்து அயர்லாந்து, இந்தோனேஷியா என 42 நாடுகள் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

அணு ஆயுதங்களை அழிப்பதற்கான சர்வதேச பரப்புரை அமைப்பின் நிர்வாக இயக்குநர் பீட்ரைஸ் கையெழுத்திட்ட நாடுகளை வெகுவாக பாராட்டினார். கயானா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளும் இந்த ஒப்பந்தத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. ஒப்பந்தம் அமலுக்கு வர 50 நாடுகளின் கையெழுத்துகள் தேவை. ஒப்பந்தம் அமலுக்கு வந்தால் அணு ஆயுதங்களை மேம்படுத்துவது, சோதனை செய்வது, உற்பத்தி செய்வது உள்ளிட்ட அனைத்து விதமான முறைகளுக்கும் தடை விதிக்கப்படும். 50 ஆண்டுகள் பழமையான அணு ஆயுத பரவல் தடைச் சட்டத்துக்கு மாற்றாக கொண்டு வரப்பட்ட இந்தப் புதிய ஒப்பந்தத்துக்கு கடந்த ஜூலை மாதம் 120-க்கும் மேற்பட்ட நாடுகள் ஒப்புதல் தெரிவித்திருந்தன. அதேசமயம் மிகப் பெரிய அணு ஆயுத நாடுகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.