உலகம்

2 மணி நேரத்தில் 36 புத்தகங்கள் படித்து உலக சாதனை படைத்த 5 வயது இந்திய-அமெரிக்க சிறுமி

Veeramani

கியாரா கவுர் என்ற 5 வயது இந்திய அமெரிக்க சிறுமி, 2 மணி நேரத்தில் 36 புத்தகங்களை படித்து லண்டனின் வேர்ல்ட் புக் ஆஃப் ரெக்கார்ட் மற்றும் ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட் ஆகியவற்றில் இடம்பெற்று உலகசாதனை படைத்திருக்கிறார்.

கடந்த பிப்ரவரி 13-ஆம் தேதியன்று  இந்த சாதனையை படைத்த கியாராவை, உலக சாதனை புத்தகம் 'குழந்தை அதிசயம்' என்று அழைக்கிறது. தற்போது அபுதாபியில் வசிக்கும் இந்திய-அமெரிக்க சிறுமியான இவர் சிறுவயதிலேயே புத்தகப்பிரியையானார். அதன்பின்னர் காரிலோ அல்லது ஓய்வறையிலோ எங்கிருந்தாலும் படிக்கப் பழகினார். இதனைப்பார்த்த கியாராவின் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் இவரை இந்த சாதனையை செய்ய தூண்டியுள்ளனர்.

இதுபற்றி கூறும் கியாரா"புத்தகங்களிலிருந்து படிப்பது மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது. புத்தகங்களை நாம் விரும்பும் இடத்திற்கு எடுத்துச் செல்லலாம். தொலைபேசிகளில் படிப்பதில் அல்லது வீடியோவைப் பார்ப்பதில் உள்ள சிக்கல் என்னவென்றால், இணையம் இல்லாவிட்டால் படிக்க முடியாது" என்று தெரிவித்தார்.

வண்ணமயமான படங்கள் மற்றும் பெரிய எழுத்துகளை கொண்ட புத்தகங்களை விரும்புவதாக தெரிவிக்கும் கியாரா,  “சிண்ட்ரெல்லா, ஆலிஸ் இன் வொண்டர்லேண்ட், லிட்டில் ரெட் ரைடிங் ஹூட் போன்ற புத்தகங்கள் எனக்கு பிடித்தமானவை. எனது தாத்தாதான் படிக்கும் ஆர்வத்தை எனக்கு ஏற்படுத்தியவர், எதிர்காலத்தில் மருத்துவராவதே என கனவு” எனக் கூறுகிறார்.