டொனால்டு ட்ரம்ப் எக்ஸ் தளம்
உலகம்

Ind - Pak தாக்குதல் | ”5 ஜெட் விமானங்கள் வீழ்த்தப்பட்டன” - ட்ரம்ப் அதிர்ச்சி தகவல்!

“இந்தியா - பாகிஸ்தான் போரின்போது 5 ஜெட் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன” என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

Prakash J

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பயங்கரவாதிகள் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான 'தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட்' பொறுப்பேற்றுக் கொண்டது. இந்தத் தாக்குதலுக்கு பதிலடியாக, ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில், இந்தியா தாக்குதலைத் தொடங்கி பயங்கரவாதிகளின் முகாம்களை அழித்தது. இதற்கு பாகிஸ்தான் ராணுவம் பதில் தாக்குதலைத் தொடங்கியதால், அதை இந்தியா தகர்த்தது. இதனால் இரு நாட்டின் எல்லைப் பகுதிகளிலும் தாக்குதல் நடத்தப்பட்டன. பின்னர், பேச்சுவார்த்தைக்குப் பின்பு இருதரப்பிலும் தாக்குதல் நிறுத்தப்பட்டது. இந்தத் தாக்குதல் நிறுத்தத்திற்கு தாம்தான் காரணம் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார்.

டொனால்டு ட்ரம்ப்

தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு இந்தியாவும், பாகிஸ்தானும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாகவும், சண்டையை நிறுத்தாவிட்டால், இருநாடுகளுடனும் வர்த்தகம் செய்ய மாட்டேன் என எச்சரித்ததாகவும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்தார். இந்தக் கருத்தை அவர் அடிக்கடி தெரிவித்து வந்தார். ஆனால், இதை இந்தியா மறுத்துவந்தது. தவிர, சமீபத்தில் இதுதொடர்பாக ட்ரம்பிடம் பிரதமர் மோடியும் தொலைபேசியில் பேசியிருந்தார்.

இந்த நிலையில் ட்ரம்ப் மீண்டும் ஒரு புதிய புயலைக் கிளப்பியுள்ளார். வெள்ளை மாளிகையில் குடியரசுக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஒரு தனிப்பட்ட விருந்தின்போது, “இந்தியா - பாகிஸ்தான் போரின்போது 5 ஜெட் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன” எனத் தெரிவித்திருப்பது மீண்டும் அதிர்வலைகளை எழுப்பியுள்ளது. அதேநேரத்தில், அவர் எந்த நாட்டின் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன என்பதைக் குறிப்பிடவில்லை.

முன்னதாக, இந்திய விமானப்படையின் பிரான்சில் தயாரிக்கப்பட்ட மூன்று ரஃபேல் போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்தியதாகவும், இந்திய விமானிகளைச் சிறைபிடித்ததாகவும் பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்தது. ஆனால், இந்தக் கூற்றுக்களை உறுதிப்படுத்த பாகிஸ்தான் எந்த ஆதாரத்தையும் வழங்கவில்லை.