உலகம்

இலங்கை குண்டுவெடிப்பில் உயிரிழந்த இந்தியர்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரிப்பு

இலங்கை குண்டுவெடிப்பில் உயிரிழந்த இந்தியர்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரிப்பு

webteam

இலங்கை தொடர் குண்டுவெடிப்பு சம்வங்களில் மேலும் 2 இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாக மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் பண்டிகையை நேற்று கொண்டாடிக்கொண்டிருந்த வேளையில் இலங்கையின் பல்வேறு இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. மொத்தம் 8 இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறின. தலைநகர் கொழும்புவில் உள்ள, ஷாங்கரி லா நட்சத்திர விடுதி, கொச்சிக்கடை அந்தோணியார் தேவாலயம் நீர்கொடும்பு கட்டுவப்பிட்டிய தேவாலயம், மட்டக்களப்பு தேவாலயம், கிங்ஸ்பெரி மற்றும் சின்னமன் கிராண்ட் ஆகிய நட்சத்திர ஹோட்டல்களிலும் வெடிகுண்டுகள் வெடித்தன. இதில் கிறிஸ்தவ தேவாலயங்களில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் பலர் பங்கேற்றிருந்த நிலையில், அவர்கள் உடல்சிதறி உயிரிழந்தனர்.

இந்த தாக்குதல் சம்பவங்களில் இதுவரை 290 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்த 4‌50-க்கும் அதிகமானோர், பல்வேறு மருத்து‌மனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த வெடிகுண்டு தாக்குதல் சம்பவத்தில், இந்தியா, போர்ச்சுக்கல், துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா நாடுகளைச் சேர்ந்தவர்களும் உயிரிழந்துள்ளனர். இந்தியாவைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்ததாக நேற்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் கே.ஜி.ஹனுமந்தராயப்பா, எம்.ரங்கப்பா ஆகிய மேலும் 2 இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாக மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார். 

குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்காத நிலையில் சந்தேகத்தின் பேரில் 24 பேரை பிடித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.