உலகம்

அமெரிக்கா: கிறிஸ்துமஸ் பேரணியில் கார் புகுந்ததில் 5 பேர் உயிரிழப்பு - 40 பேர் காயம்

Veeramani

ஞாயிற்றுக்கிழமையன்று அமெரிக்காவின் விஸ்கான்சின் மாநிலத்தில் நடந்த கிறிஸ்துமஸ் அணிவகுப்பில் எஸ்யுவி கார் மோதியதில் 5 பேர் உயிரிழந்தனர் மற்றும் 40 பேர் காயமடைந்தனர் என்று மாகாண போலீசார் தெரிவித்தனர்.

மில்வாக்கியின் புறநகர்ப் பகுதியான வௌகேஷாவில், மாலை 4:30 மணியளவில் கிறிஸ்துமஸ் அணிவகுப்பு நடந்தபோது, சிவப்பு நிற SUV ஒன்று தடைகளை உடைத்து பேரணிக்குள் சென்றது. இதில் பேரணியில் கலந்து கொண்ட  5 பேர் இறந்துள்ளனர். 40 பேர் காயமடைந்துள்ளனர். இருப்பினும் கூடுதல் தகவல்களை சேகரிக்கும் போது இந்த எண்ணிக்கை மாறக்கூடும் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தில் சில குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். சம்பந்தப்பட்ட வாகனத்தை காவல்துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். தற்போது வேறு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று செய்தியாளர் சந்திப்பில் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.இது தொடர்பான தீவிர விசாரணை தொடர்கிறதுஎன்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ஜோ பைடன் நிலைமை குறித்த விளக்கத்தைப் பெற்றுள்ளார். வெள்ளை மாளிகை தரப்பிலிருந்து வௌகேஷாவின் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த பயங்கரமான சம்பவத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் எங்கள் இரங்கலை தெரிவித்துக்கொள்வதாகவும் வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.