gold ANI
உலகம்

5 ஆயிரம் கிலோ தங்கம்! 400 வருட மர்மத்துக்கு விடை! வரலாற்றின் அரிய புதையல்!

400 வருட அரிய புதையலை ஆய்வாளர்கள் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளனர்.

PT WEB

செய்தியாளர் - கார்த்திகேயன்

புதையலை தேடும் சாகச கதைகள் என்று சொன்னாலே மக்கள் உற்சாகம் ஆகிவிடுவார்கள். புதையலுக்கான குறிப்புகள், அது இருக்கும் இடம், அது மறைத்து வைக்கப்பட்டு இருக்கும் விதம் என்று பல்வேறு விஷயங்கள் மிகவும் சுவாரசியமாக இடம்பெற்றிருக்கும். மர்மமான சில முடிச்சுகளும் போட்டு, அந்த கதையை இன்னும் சுவாரஸ்மாக்கி இருப்பார்கள்.

இவ்வாறு சினிமாவிலும், நாவல்களிலும் மட்டுமே பார்த்து, படித்து வந்த சம்பவம் ஒன்று, உண்மையிலேயே நடந்திருக்கிறது. அதாவது, 1633-ஆம் ஆண்டு ஜூலை மாதம், மன்னர் முதலாம் சார்லஜின் முடிசூட்டு விழாவிற்காக, ஸ்காட்லாந்து நாட்டிற்கு கப்பலில் பலர் சென்றனர்.

gold

பர்ன்டிஸ்லேண்ட் மற்றும் லீத் பகுதிகளுக்கு இடையே பயணித்த இந்த கப்பல், திடீரென விபத்தில் சிக்கி கடலில் மூழ்கியது. இந்த கோர விபத்தில் கப்பலில் இருந்த 33 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், இருவர் மட்டுமே உயிர் தப்பினர். மேலும், 5 ஆயிரம் கிலோ தங்கம், வெள்ளி, பல விலைமதிப்பற்ற பொக்கிஷங்கள் என்று பல நூறு மில்லியன் பவுண்டுகள் மதிப்பிலான பொருட்கள், கப்பலோடு சேர்ந்து கடலில் மூழ்கியது.

இதுமட்டுமின்றி, மன்னர் எட்டாம் ஹென்றி இரவு உணவு அருந்தும்போது மட்டும் பயன்படுத்தியதாக கூறப்படும் அரிய பொருட்களும், கடலில் மூழ்கி மாயமானது. 400 வருடங்களுக்கு முன்பு நடந்த இந்த விபத்து குறித்தும், கடலில் மூழ்கிய பொக்கிஷங்கள் குறித்தும், ஒரு தன்னார்வலர் குழு 30 ஆண்டுகளாக ஆய்வு நடத்தி வந்தது.

gold

கப்பல் மூழ்கிய பகுதி மிகவும் ஆழமானதாக இருந்ததால், புதையலை தேடும் பணி, தன்னார்வலர்கள் குழுவுக்கு மிகவும் சவாலாக இருந்தது. மாறிக்கொண்டே இருக்கும் வண்டல் மண் படிவுகள், நீருக்கடியில் குறைவான பார்வைத் திறன் இருப்பது போன்றவை தேடுதல் பணியை தொடர தடைகளாக இருந்தன. நீண்ட போராட்டத்திற்குப் பிறகு, நீருக்கடியில் பயன்படுத்தப்படும் சிறப்பு ரேடார்கள், மேம்படுத்தப்பட்ட ஸ்கேனிங் மெஷின்கள் என, அதிநவீன தொழில்நுட்பங்கள் மூலம், ஒரு மரத்துண்டை கண்டறிந்த ஆய்வுக்குழு, அது மூழ்கிய கப்பலின் ஒரு பாகம் என்று கண்டறிந்துள்ளனர்.

தற்போது பர்ன்டிஸ்லேண்ட் நகரத்திலிருந்து சுமார் ஒரு மைல் தொலைவில் கப்பல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடையாளத்தை முழுமையாக உறுதிப்படுத்தவும், கப்பலுக்குள் உள்ள பொருட்களை சேதமடையாமல் மீட்டெடுக்கவும் விரிவான ஆய்வுகள் மற்றும் அகழ்வாராய்ச்சிப் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.