40 Amazon's satellites have been destroyed  ULA
உலகம்

ஒரே நேரத்தில் எரிந்த 40 செயற்கைக்கோள்கள்: அமேசான் நிறுவனத்துக்கு பேரிடி! என்ன நடந்தது?

தொழில்நுட்ப கோளாறு காரணமாக அமேசான் நிறுவனத்தின் 40 செயற்கைக்கோள்கள் அழிந்துள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Praveen Joshva L

அமேசான் நிறுவனத்தின் லியோ திட்டத்தின் கீழ் 40 செயற்கைக்கோள்கள் வல்கன் ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்ட நிலையில், தொழில்நுட்பக் கோளாறால் திட்டம் தோல்வியடைந்தது. இதனால் செயற்கைக்கோள்கள் வானிலேயே எரிந்து சாம்பலானது. ULA நிறுவனம் காரணத்தைக் கண்டறிய தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது.

எலான் மஸ்க்கின் 'ஸ்டார்லிங்க்' (Starlink) இணையச் சேவைக்குப் போட்டியாக அமேசான் நிறுவனம் வானில் 3,300-க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்களை நிலைநிறுத்தும் 'அமேசான் லியோ' (Amazon Leo) திட்டத்தை செயல்படுத்தும் பணிகளை மேற்கொண்டுள்ளது . இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக 40 அமேசான் லியோ (Amazon Leo) இணையச் செயற்கைக்கோள்களை அனுப்ப திட்டமிட்டிருந்தது.

இந்த செயற்கைகோள்கள் ULA என அழைக்கப்படும் யுனைடெட் லாஞ்ச் அலையன்ஸ் (United Launch Alliance - ULA) நிறுவனத்தின் வல்கன் (Vulcan) ராக்கெட் மூலம் அமெரிக்காவின் கேப் கனாவெரல் விண்வெளிப் படைத் தளத்தில் (Cape Canaveral Space Force Station - CCSFS) இருந்து நேற்று விண்ணில் ஏவப்பட்டது.

முன்னதாக நைட்ரஜன் ஆலைக் கோளாறு மற்றும் நெட்வொர்க் சிக்கல்களால் இரண்டு முறை விண்ணில் ஏவுவது ஒத்திவைக்கப்பட்டிருந்தது. எனினும் நேற்று விண்ணில் ஏவப்பட்ட நிலையில், ஏவப்பட்டு 10-வது நிமிடத்திலேயே தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு ராக்கெட் வழக்கத்திற்கு மாறான திசையில் நகர்ந்தது. இதனால் 40 செயற்கைக்கோள்களையும் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்த முடியாமல் திட்டம் தோல்வியடைந்தது. அதோடு ராக்கெட்டின் மேல் பகுதியும் செயற்கைக்கோள்களும் வானிலேயே எரிந்து சாம்பலானது.

இந்தத் தோல்விக்கான காரணத்தைக் கண்டறிய ULA தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளது. அமெரிக்காவின் விண்வெளிப் பாதுகாப்பு மற்றும் ஆர்டெமிஸ் (Artemis) திட்டங்களுக்கு ULA மிகவும் அவசியம் என்பதால், இந்த விசாரணைக்கு தேவையான அனைத்துத் தொழில்நுட்ப உதவிகளையும் வழங்கத் தயாராக இருப்பதாக நாசா அமைப்பு அறிவித்துள்ளது.

அமேசான் நிறுவனம் ஏற்கனவே 398 செயற்கைகோள்களை விண்ணில் நிலைநிறுத்தியுள்ள நிலையில், இந்த திட்டத்தின் தோல்வி அமேசான் நிறுவனத்துக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. அதே போல போயிங் மற்றும் லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனங்களின் கூட்டு முயற்சியான ULA நிறுவனம் 2006-இல் தொடங்கப்பட்ட பிறகு சந்தித்த முதல் முழுமையான ராக்கெட் தோல்வி இது என்பதும் குறிப்பிடத்தக்கது.