உலகம்

ரஷ்யா - உக்ரைன் போர்: கடும் குளிரில் 8 கி.மீ. நடந்தே செல்லும் இந்திய மருத்துவ மாணவர்கள்

சங்கீதா

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், இந்திய மருத்துவ மாணவர்கள் 40 பேர், 8 கிலோமீட்டர் நடந்தே சென்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேர்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதன் அண்டை நாடான ரஷ்யா, அந்த நாட்டின் மீது சரமாரியாக குண்டுகள் மற்றும் ஏவுகணைகளை வீசி நேற்று முதல் தாக்குதல் நடத்தி வருகின்றது. இதனால் உக்ரைனில் பதற்றமான சூழல் நிலவுவதால், அங்குள்ள இந்தியா, பிரிட்டன் உள்ளிட்ட வெளிநாட்டு மக்கள் உக்ரைனை விட்டு வெளியேறி வருகின்றனர்.

உக்ரைன் மீது ரஷ்யா நடத்திவரும் இந்த தாக்குதலால், அங்கு தங்கியிருக்கும் மாணவர்கள் உள்ளிட்ட இந்தியர்கள், அங்கிருந்து பத்திரமாக வெளியேற வேண்டிய சூழல் உருவாகியிருக்கிறது. ஏற்கெனவே, 4,000 பேர் மீட்கப்பட்டுவிட்ட நிலையில், இன்னமும் 16,000-க்கும் மேற்பட்டோர் அங்கு அபாயச் சூழலில் சிக்கியிருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் வான்வழிப் போக்குவரத்தை உக்ரைன் அரசு நிறுத்தி வைத்திருக்கிறது. இதனால் விமானம் மூலம் நாட்டை விட்டு வெளியேற முடியாததால், இந்தியர்களை உக்ரைனின் அண்டை நாடுகளின் நில எல்லை வழியே பத்திரமாக வெளியேற்ற மத்திய அரசு முடிவு செய்து, ருமேனியா, ஹங்கேரி, ஸ்லோவாக்கியா உள்ளிட்ட நாடுகளுடன் ஏற்கனவே பேசியுள்ளத.

உக்ரைனில் உள்ள இந்தியர்களுக்கு, இது தொடர்பான வழிகாட்டுதல்களை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவித்திருந்தது. இந்நிலையில், இந்திய மருத்துவ மாணவர்கள் 40 பேர், 8 கிலோமீட்டர் நடந்தே சென்றுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் எல்லையில் உள்ள லிவிவ் நகரம், போலந்து நாட்டிலிருந்து 70 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது. அங்குள்ள மருத்துவக் கல்லூரியில் (Daynlo Halytsky Medical University) இந்தியாவைச் சேர்ந்த மாணவர்கள் பலர் பயின்று வருகின்றனர்.

இதையடுத்து மருத்துவக் கல்லூரியே வாகனம் ஒன்றை ஏற்பாடு செய்து, அந்த வாகனம் மூலம், போலந்து எல்லை அருகே 40 மாணவர்கள் அனுப்பியது. எல்லையிலிருந்து ஏறத்தாழ 8 கிலோமீட்டர் தொலைவில், சாலையில் மாணவர்கள் இறக்கிவிடப்பட்டனர். அங்கிருந்து அவர்கள் நடந்தே போலந்துக்குச் சென்ற காட்சிகள் காணொலியாக வெளியிடப்பட்டிருக்கின்றன. மாணவர்களில் ஒருவர் அந்தக் காட்சிகளை வெளியிட்டிருக்கிறார்.