Houthis In Perim Island  reuters
உலகம்

ஹவுதிகள் கைப்பற்றிய 4 முக்கிய இடங்கள்.. எண்ணெய் ஏற்றுமதிக்கு சவால்.. அதிர்ச்சியில் சவூதி!

மோகா மற்றும் மயூன் போன்ற பகுதிகளில் ஹவுதிகளின் முன்னேற்றம் சவூதி அரேபியாவின் எண்ணெய் ஏற்றுமதி மற்றும் சர்வதேச கப்பல் போக்குவரத்து தொடர்பாக புதிய கவலைகளை ஏற்படுத்தியுள்ளது.

PT WEB

செய்தியாளர் - M. மீரா

ஏமன் உள்நாட்டுப் போரின் பின்னணியில், ஹவுதி படைகளுக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையிலான மோதல் மீண்டும் தீவிரமடைந்து வருகிறது. செங்கடல் மற்றும் பாப் அல்-மண்டேப் பகுதிகளில் ஹவுதிகளின் நடவடிக்கைகள் அதிகரித்துள்ள நிலையில், சவூதி அரேபியா பதிலடி தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது. இதனால் பிராந்திய பாதுகாப்பு மற்றும் சர்வதேச கப்பல் போக்குவரத்து மீது புதிய பதற்றம் உருவாகியுள்ளது. சமீபத்திய தகவல்களின்படி, ஏமனில் ஹவுதி படைகள் செங்கடல் கடற்கரையை ஒட்டிய முக்கியப் பகுதிகளில் வேகமாக முன்னேறி வருகின்றன. குறிப்பாக, பாப் அல்-மண்டேப் நீரிணைக்கு அருகே அவர்களின் கட்டுப்பாடு அதிகரித்துள்ளது. இந்த நிலையில், ஹவுதி அமைப்பினர் கைப்பற்றிய சில பகுதிகளைப் பார்க்கலாம்..\

houthis

ஹவுதிகள் கைப்பற்றிய முக்கியப் பகுதிகள்

1. மோகா (Mocha/Mokha) துறைமுக நகரம்

செப்டம்பர் 10ஆம் தேதி, செங்கடல் கரையில் அமைந்துள்ள முக்கிய துறைமுக நகரமான மோகாவை ஹவுதிகள் கைப்பற்றியதாக ஏமன் அரசு தரப்பும் சர்வதேச ஊடகங்களும் தெரிவித்துள்ளன. இந்த நகரம் பாப் அல்-மண்டேப் நீரிணைக்கு அருகில் இருப்பதால், அதன் ராணுவ மற்றும் வர்த்தகம் முக்கியத்துவம் அதிகம்.

2. மயூன் / பெரிம் தீவு (Mayun/Perim Island)

அடுத்ததாக, பாப் அல்-மண்டேப் நீரிணையின் நடுவில் அமைந்துள்ள மயூன் தீவையும் ஹவுதிகள் கைப்பற்றியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தத் தீவு நீரிணையின் கடல்வழிப் போக்குவரத்தை கண்காணிக்க முக்கியமான இடமாகக் கருதப்படுகிறது.

Perim Island

3. துபாப் (Dhubab)

மோகாவிலிருந்து தெற்கே உள்ள துபாப் பகுதியிலும் ஹவுதிகள் முன்னேறியதாக செய்திகள் தெரிவிக்கின்றன. துபாப் பகுதி மயூன் தீவையும் பாப் அல்-மண்டேப் நீரிணையையும் நேரடியாக எதிர்நோக்கியுள்ளதால், அதன் கட்டுப்பாடு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

4. ஹனிஷ் தீவுக்கூட்டம்

மேலும், ஹனிஷ் தீவுக்கூட்டத்தைச் சுற்றிய பகுதிகளிலும் ஹவுதி படைகள் முன்னேறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹனிஷ் தீவுகள் செங்கடலின் முக்கிய கடல்வழிப் பாதைக்கு அருகில் அமைந்துள்ளன.

இந்தப் பகுதிகள் அனைத்தும் பாப் அல்-மண்டேப் நீரிணையைச் சுற்றி அமைந்துள்ளன. செங்கடலையும் ஏடன் வளைகுடாவையும் இணைக்கும் இந்தக் குறுகிய கடல்வழி, ஐரோப்பா–ஆசியா இடையிலான கப்பல் போக்குவரத்துக்கும், மத்திய கிழக்கிலிருந்து எண்ணெய் ஏற்றுமதிக்கும் முக்கியமான பாதையாக உள்ளது.

குறிப்பாக, ஹார்முஸ் நீரிணையில் ஏற்பட்டுள்ள பதற்றத்துக்கு மாற்று வழியாக செங்கடல் பாதை பார்க்கப்பட்ட நிலையில், மோகா மற்றும் மயூன் போன்ற பகுதிகளில் ஹவுதிகளின் முன்னேற்றம் சவூதி அரேபியாவின் எண்ணெய் ஏற்றுமதி மற்றும் சர்வதேச கப்பல் போக்குவரத்து தொடர்பாக புதிய கவலைகளை ஏற்படுத்தியுள்ளது.