செய்தியாளர் - Vaijayanthi S
தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் விடுமுறைக்காக அமெரிக்கா சென்று உள்ளனர். அங்கு அட்லாண்டாவில் உள்ள தங்களது உறவினர்களைப் பார்த்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்தபோது, அவர்களது கார் சாலை விபத்தில் சிக்கியது. அப்போது அவர்கள் சென்ற கார் லாரிமீது மோதி தீ பற்றியது. அதில் உடல் கருகி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதில் பெற்றோர்களான தேஜஸ்வினி, ஸ்ரீ வெங்கட் மற்றும் அவர்களது இரண்டு குழந்தைகள் டல்லாஸில் இருந்த போது இந்த சம்பவம் நிகழ்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இறந்தவர்களின் உடல்கள் இறுதிச் சடங்குகளுக்காக ஹைதராபாத்திற்கு கொண்டு வரப்படும் என இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
இதேபோன்ற மற்றொரு சாலை விபத்தில் நியூயார்க்கில் இந்தியாவை சேர்ந்த கிளீவ்லேண்ட் மாநில பல்கலைக்கழகத்தில் படிக்கும் இரண்டு இந்திய மாணவர்கள் இறந்ததாக இந்திய துணைத் தூதரகம் தெரிவித்துள்ளது. சாலை விபத்தில் உயிரிழந்த அந்த மாணவர்கள் 20 வயது மானவ் படேல் மற்றும் 23 வயது சவுரவ் பிரபாகர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த சாலை விபத்தில் முன் இருக்கையில் அமர்ந்திருந்த மற்றொரு பயணியும் காயமடைந்து உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சிகளில் வாகனம் சாலையை விட்டு விலகி, ஒரு மரத்தில் மோதி, பின்னர் பாலத்தில் மோதியது தெரியவந்துள்ளது.. இந்த கோர விபத்து குறித்து தங்களது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்வதாக இந்திய துணைத் தூதரகம் X வலைதளத்தில் பதிவிட்டுள்ளது.