Queens Medical Centre
Queens Medical Centre pt
உலகம்

தலைவலிக்காக மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் 7 மணி நேரமாக காத்திருந்த பெண்; 2 நாட்களில் மரணம்

யுவபுருஷ்

இங்கிலாந்து நாட்டின் நொட்டிங்காம் நகரில் க்யூன்ஸ் மருத்துவமனை வளாகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனைக்கு கடந்த ஜனவரி 19-ம் தேதி அன்று நள்ளிரவு நேரத்தில் 39 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தலைவலி பிரச்னைக்காக அவசர சிகிச்சை பிரிவுக்கு வந்தார். 2 குழந்தைகளுக்கு தாயான இவர், இரவு நேரத்தில் தனியாக மருத்துவமனைக்கு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அங்கு மருத்துவரைப் பார்க்க 7 மணி நேரமாக காத்திருந்துள்ளார்.

தீவிரமான தலைவலி என்று கூறிய நிலையில், செவிலியர்கள் மூன்று முறை அவரை பரிசோதனை செய்துவிட்டுச் சென்றுள்ளனர். ஆனால், மருத்துவர்கள் யாரும் அந்த பெண்ணிடம் என்ன பிரச்னை என்று கேட்கவில்லை.

தொடர்ந்து, மறுநாள் அந்த பெண்ணுக்கு தலைவலி அதிகமானபோது, அவரை மருத்துவர்கள் அழைத்தும் அவர் பேச்சு கொடுக்கவில்லை. தலைவலி அதிகமானதன் காரணமாகவே, அவர் சுய நினைவை இழந்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையே, ஐசியூ வார்டுக்கு மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் ஜனவரி 22ம் தேதி அந்தப் பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவு காரணமாகவே அந்த பெண் உயிரிழந்துள்ளார். தலைவலி என்று வந்தபோதே உடனடியாக சிகிச்சை அளித்திருந்தால் அவர் உயிரிழந்திருக்க மாட்டார் என்று கூறப்படும் நிலையில், குறிப்பிட்ட அந்த மருத்துவமனையில், தினசரி அதிகப்படியானோர் நீண்ட நேரமாக அவசர சிகிச்சைக்காக காத்திருப்பதாக தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக மருத்துவமனை தரப்பில், ”விபத்து மற்றும் அவசர தடுப்பு பிரிவில் தினமும் 80க்கும் மேற்பட்டவர்கள் 12 - 14 மணி நேரத்திற்கு காத்திருக்கின்றனர்” என்று கூறப்பட்டுள்ளது. பெண்ணின் இறப்புக்கு இரங்கல் தெரிவிப்பதாக கூறிய மருத்துவமனை நிர்வாகம், இதுதொடர்பாக விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த விசாரணை முடிந்ததும் வெளியில் இருந்து ஒரு மருத்துவக்குழு வந்து இது தொடர்பாக விசாரிக்கும்” என்று தெரிவித்துள்ளனர்.

இந்த ஜனவரி மாதத்தில் மட்டும் இங்கிலாந்து மருத்துவமனைகளில் அவசர சிகிச்சை பிரிவுகளில் 25 சதவீதத்திற்கு மேற்பட்டோர், சுமார் 12 மணி நேரம் வரை காத்திருப்பதாக ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இந்நிலையில், இது குறித்து விசாரணை மேற்கொள்ள குழு ஒன்று அமைக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.