36 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு கடலில் வாழ்ந்த 55 அடி திமிங்கலத்தின் எலும்புக்கூடை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
பெரு நாட்டின் தலைநகரமான லிமாவுக்கு தெற்கே சுமார் 350 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பெருவியன் பாலைவனத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டின் இறுதியில் பாசிலோசொரஸ் வகையை சேர்ந்த திமிங்கலம் ஒன்றின் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த பாசிலோசொரஸ் திமிங்கலத்தின் புதைபடிவ எச்சங்களை ஆராய்ச்சியாளர்கள் நேற்று (வியாழக்கிழமை) வெளியிட்டனர். பாசிலோசொரஸ் திமிங்கலம், சுமார் 55 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஆரம்பகால திமிங்கில வகையைச் சார்ந்த ஒரு பேரினம் ஆகும்.
'ஒக்குகேஜ் பிரிடேட்டர்' (Ocucaje Predator) எனப் பெயரிடப்பட்ட இந்த பாசிலோசொரஸ் திமிங்கலம் 55 அடி நீளம் கொண்டிருக்கிறது. பாசிலோசொரஸ் திமிங்கலங்கள் ஆரம்பத்தில் ஊர்வன இன விலங்காக கருதப்பட்ட நிலையில், பின்னர் அது ஒரு கடல் பாலூட்டியாக இருந்திருக்கலாம் என புதைபடிம ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். மில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு பாசிலோசொரஸ் திமிங்கலம் எவ்வாறு வாழ்ந்தன என்பது குறித்தும், அவை இப்போதிருக்கும் திமிங்கலங்களில் இருந்து எவ்வாறு வேறுபடுகின்றன என்பது குறித்தும் நன்கு புரிந்துகொள்ள ஆராய்ச்சியாளர்களுக்கு இந்த கண்டுபிடிப்பு உதவும்.
"இந்த கண்டுபிடிப்பு மிகவும் முக்கியமானது. ஏனென்றால் உலகில் இதுபோன்று வேறு எந்த மாதிரிகள் கண்டுபிடிக்கப்படவில்லை" என்று லிமாவில் உள்ள சான் மார்கோஸ் தேசிய பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர் உர்பினா கூறுகிறார்.
இதையும் படிக்க: நெட்ஃபிளிக்ஸ் கணக்கை ஷேர் செய்து பயன்படுத்துவோரா நீங்கள்? - வெளியான புதிய அறிவிப்பு