உலகம்

இலங்கை குண்டுவெடிப்பில் 36 வெளிநாட்டினர் உயிரிழப்பு

webteam

இலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 36 வெளிநாட்டினர் உயிரிழந்துள்ளனர்.

இலங்கையின் கொழும்புவில் இன்று கிறிஸ்துவ தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகள் உட்பட 8 இடங்களில் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. இந்த தாக்குதலில் 207 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் 450க்கு மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். இந்தத் தாக்குதலில் மூன்று இலங்கை காவல்துறை அதிகாரிகளும் உயிரிழந்துள்ளனர்.

இந்த தாக்குதலுக்கு பல உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதேபோல இலங்கையிலுள்ள இரண்டு இஸ்லாமிய அமைப்புகளும் இச்சம்பவத்திற்கு கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளனர். இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் தேவாலயங்களில் வழிபாட்டில் இருந்த 75 பேர் உயிரிழந்தனர். அதேபோல், நட்சத்திர விடுதிகளில் தங்கியிருந்த 36 வெளிநாட்டினர்  உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவற்றில் 3 பேர் இந்தியாவையும், 5 பேர் பிரிட்டனையும், ஒருவர் போர்சுகலையும் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது. அத்துடன் தாக்குதலில் சில அமெரிக்கர்களும் மற்றும் சீனர்களும் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த கோர சம்பவம் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு அமைப்பு அமைக்கப்படவுள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது. இதுகுறித்த ஆணையை அதிபர் சிறிசேன இன்னும் 24 மணி நேரத்திற்குள் அறிவிப்பார் எனத் தெரியவந்துள்ளது. முன்னதாக இலங்கையில் சமூகவலைத்தளங்கள் மற்றும் தொலைத்தொடர்புத்துறை ஆகியவை துண்டிக்கப்பட்டது. அத்துடன் இச்சம்பவம் தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.