நேட்டோ அமைப்பு நாடுகளில் உக்ரைன் இணையக்கூடாது என்பதற்காக, அதன் அண்டை நாடான ரஷ்யா, கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி முதல் அந்நாட்டின் மீது போர் தொடுத்து வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் நிதி உதவி மற்றும் ஆயுத உதவி அளித்து வருவதால், உக்ரைனும் ரஷ்யாவுக்கு பதிலடி கொடுத்து வருகிறது.
இதன் காரணமாக இவ்விரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் போர், இரண்டு ஆண்டுகளைக் கடந்தும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, ரஷ்யாவுக்கு அதன் நட்பு நாடான வடகொரியா ஏவுகணைகள், அணு ஆயுதம் மற்றும் ராணுவ வீரர்கள் உள்ளிட உதவிகளைச் செய்திருப்பதாக அமெரிக்கா, உக்ரைன், தென்கொரியா உள்ளிட்ட நாடுகள் உறுதிப்படுத்தியிருந்தன.
அதன்படி, ரஷ்யாவுக்கு ஆதரவாக வடகொரியா ராணுவம் நேரடியாக களத்தில் இறங்கி உள்ளதாகவும், அந்நாட்டு ராணுவத்தின் அதிசிறப்பு படையைச் சேர்ந்த 10 ஆயிரம் ராணுவ வீரர்களை ரஷ்யாவுக்கு வழங்கி உள்ளதாகவும், அவர்கள் ஏகே12 ரக துப்பாக்கிகள், பீரங்கி குண்டுகள் மற்றும் பிற ஆயுதங்களுடன் உக்ரைனை ஒட்டிய எல்லைப் பகுதியில் குவிக்கப்பட்டு உள்ளதாகவும் உக்ரைன் உளவுப் பிரிவு தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், உக்ரைன் ராணுவம் இன்று (டிச.16) வெளியிட்டுள்ள தகவலின்படி, ‘எங்கள் நாட்டு ராணுவம் வடக்கு எல்லையையொட்டிய குர்ஸ்க் பகுதியில் எல்லையில் மேற்கொண்ட தாக்குதல்களில் இதுவரை 30 வடகொரிய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்’ எனத் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்நாட்டு ராணுவம், “டிசம்பர் 14 மற்றும் 15ஆம் தேதிகளில், கொரியா ஜனநாயக மக்கள் குடியரசின் (டிபிஆர்கே) ராணுவப் பிரிவுகள் ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில் உள்ள பிளெகோவோ, வோரோஷ்பா, மார்டினோவ்கா ஆகிய கிராமங்களுக்கு அருகே குறிப்பிடத்தக்க இழப்புகளைச் சந்தித்தன. அதில் குறைந்தது 30 வீரர்கள் கொல்லப்பட்டனர்” என தெரிவித்துள்ளது.