உலகம்

’படுத்தே விட்டானையா’ : சுட்டிக்குழந்தையின் செயலால் வியப்பு; சீனாவில் நடந்த சுவாரஸ்யம்!

’படுத்தே விட்டானையா’ : சுட்டிக்குழந்தையின் செயலால் வியப்பு; சீனாவில் நடந்த சுவாரஸ்யம்!

JananiGovindhan

சிறார்களுக்கான போட்டிகளின் போது குழந்தைகள் செய்யும் சேட்டைகள், குறும்புகள், பாவனைகள் பார்வையாளர்களை எப்போதுமே ரசிக்க வைக்கும்.

இணைய உலகம் பல்கி பெருகியதால் அந்த குழந்தைகளின் சேட்டைகள் குறித்த வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வட்டமடிக்க தவறுவதில்லை.

அந்த வகையில் சீனாவின் சாங்கிங் என்ற நகரத்தில் நடந்த நடன நிகழ்ச்சியில் பங்கேற்ற குழந்தை ஒன்று மேடையிலேயே தூங்கிய வேடிக்கையான சம்பவம் அரங்கேறியிருக்கிறது.

கடந்த மே 30ம் தேதி நடந்த இந்த நிகழ்வு தொடர்பான வீடியோவை அமெரிக்காவின் Now This என்ற பிரபல செய்தி நிறுவனம் வெளியிட்டிருக்கிறது.

குழுவாக குழந்தைகள் பலர் கைகளை அசைத்து நடனமாடிக் கொண்டிருக்க, மேடையில் வண்ணத்துப்பூச்சியை போல உடையணிந்திருந்த 3 வயதான அந்த அழகான சுட்டிப்பெண் பட்டுப்புழுவை போன்று படுத்திருந்திருக்கிறார்.

இதனைக்கண்ட பார்வையாளர்கள், முதலில் நடனத்தின் இடையே அந்த குழந்தை ஏதோ செய்வார் என எதிர்பார்த்திருந்தவர்களுக்கு பின்னர்தான் தெரிந்தது அக்குழந்தை ஆழ்ந்து தூங்கிக்கொண்டிருக்கிறார் என்று.

வெறும் 24 விநாடிகளே கொண்ட அந்த வீடியோ வெளியிடப்பட்ட சில நிமிடங்களிலேயே 24 ஆயிரத்துக்கும் மேலானோரால் பார்க்கப்பட்டிருக்கிறது. அந்த வீடியோவை பகிர்ந்தவர்கள், 3 வயது குழந்தையை கூட இந்த ஸ்ட்ரெஸ் விட்டுவைக்கவில்லை பதிவிட்டிருக்கிறார்கள்.

மேலும், அலுவலகத்தில் வேலை செய்துக் கொண்டிருக்கும்போது இதுதான் எனக்கும் நடக்கும் எனவும் பலர் ட்வீட்டியிருக்கிறார்கள்.

இதேப்போன்று கிழக்கு சீனாவில் கடந்த 2021 மார்ச் மாதத்தின் போது நடந்த நடனப் போட்டியின் போது 5 வயது குழந்தை ஒன்று மேடையிலேயே கண்ணை சொக்கி தூங்கி வழிந்திருக்கிறார். அந்த காணொலி லட்சக்கணக்கானோரால் பார்க்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.