அமெரிக்காவில் யோகா மையத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர். 4 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ளது டல்லாஹஸி நகரம். இங்குள்ள யோகோ ஸ்டூடியோ ஒன்றில் நேற்று மாலை பலர் யோகா செய்துகொண்டிருந்தனர். அப்போது திடீரென்று அங்கு நுழைந்த ஒருவர், தான் வைத்திருந்த துப்பாக்கியால் திடீரென சுடத் தொடங்கினார்.
இதில் பலர் காயமடைந்து ரத்த வெள்ளத்தில் விழுந்தனர். சிலர் அலறி அடித்தபடி ஓடினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. துப்பாக்கியால் சுட்ட நபர் பிறகு தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார்.
போலீசார் விரைந்து வந்து துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களின் உடல்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது இந்த சம்பவத்தில் துப்பாக்கியால் சுடப்பட்டவர் உட்பட 3 பேர் உயிரிழந்தது தெரியவந்தது. காயமடைந்த 4 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் இரண்டு பேரின் நிலமை கவலைக்கிடமாக உள்ளது.
துப்பாக்கியால் சுட்ட நபர் யார் என்பது இன்னும் அடையாளம் காணப்படவில்லை. எதற்காக இந்த துப்பாக்கிச்சூடு நடந்தது என்பது குறித்தும் உடனடியாக தெரியவில்லை. போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சமீபகாலமாக, அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் இதுபோன்ற துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அதிகமாக நடந்துவருகிறது. இது அந்த நாட்டு மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.