ஹார்முஸ் பகுதியில் 27 இந்திய மாலுமிகள் பயணித்த எண்ணெய் கப்பல் மீது மர்ம நபர்கள் கண்ணிவெடி தாக்குதல் நடத்தினர். கப்பலில் தீ விபத்து ஏற்பட்டாலும், யாருக்கும் காயம் ஏற்படவில்லை. மாலுமிகள் தீயை அணைத்து, கப்பல் தனது பயணத்தை தொடர்ந்தது. மத்திய அமைச்சர் மாலுமிகள் பாதுகாப்பாக இருப்பதாக உறுதியளித்தார்.
செய்தியாளர் - M.மீரா
ஈரான் - அமெரிக்கா இடையிலான மோதல் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் பதற்றம் நீடித்து வரும் நிலையில், இந்திய மாலுமிகள் 27 பேர் பயணித்த எண்ணெய் கப்பல் மீது கண்ணிவெடி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
பனாமா நாட்டின் கொடியுடன் பயணித்த MT LOUISE 1 என்ற கச்சா எண்ணெய் கப்பல், வெள்ளிக்கிழமை ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் சென்றுகொண்டிருந்தது. அப்போது சிறிய படகு ஒன்றில் வந்த மர்ம நபர்கள், கப்பலின் அடிப்பகுதியில் இரண்டு கண்ணிவெடிகளைப் பொருத்தியதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
சிறிது நேரத்தில் அந்த வெடிகுண்டுகள் வெடித்ததில் கப்பலின் எஞ்சின் அறையில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் கப்பல் தற்காலிகமாகச் செயலிழந்தது. இருப்பினும், கப்பலில் இருந்த மாலுமிகள் தீயை அணைத்தனர். இந்தத் தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. எண்ணெய் கசிவும் ஏற்படவில்லை. பின்னர் கப்பல் தனது பயணத்தைத் தொடர்ந்தது என்றும் அச்செய்தி அறிக்கை கூறுகிறது.
இதுகுறித்து மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால் கூறுகையில், இரு கப்பல்களிலும் இருந்த 27 இந்திய மாலுமிகள் பாதுகாப்பாக இருப்பதாகவும், யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார். இந்திய மாலுமிகளின் பாதுகாப்பை உறுதி செய்யத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் கூறியுள்ளார்.