உலகம்

அமெரிக்காவின் புதிய அரசின் நிர்வாகத்தில் இடம்பிடிக்கும் 25 அமெரிக்க வாழ் இந்தியர்கள்

அமெரிக்காவின் புதிய அரசின் நிர்வாகத்தில் இடம்பிடிக்கும் 25 அமெரிக்க வாழ் இந்தியர்கள்

EllusamyKarthik

அமெரிக்காவின் புதிய அரசின் நிர்வாகத்தில் 25 அமெரிக்க வாழ் இந்தியர்கள் இடம்பிடித்துள்ளனர்.

அமெரிக்காவில் விரைவில் அதிபராக பதவி ஏற்க உள்ள ஜோ பைடன் தலைமையிலான அரசு ஆட்சி அமைக்க உள்ளது. அதிபராக ஜோ பைடன் பதவி ஏற்றவுடன் அவரது அரசின் நிர்வாக பணியை கவனிப்பதற்கான நபர்களை பணி அமர்த்தும் பணி தீவிரமாக நடைபெறுகிறது. எப்படியும் சுமார் 25 அமெரிக்க வாழ் இந்தியர்கள் பைடன் மற்றும் கமலா ஹாரிஸின் நிர்வாகக் குழுவில் இருப்பார்கள் என சொல்லப்படுகிறது. 

அதில் 15 பேருக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட உள்ளன. தெற்காசிய சமூகத்தை சேர்ந்த மக்களின் கை, பைடன் அரசில் ஓங்கியிருப்பதை வரவேற்பதாக அமெரிக்க வாழ் இந்தியர்கள் தெரிவித்துள்ளனர். 

“திறமை வாய்ந்த தனி நபர்கள் பைடனின் நிர்வாகக் குழுவில் பணியாற்ற உள்ளனர். நீரா டண்டன், விவேக் மூர்த்தி, ரோகினி கோசோக்ளு, அலி சாய்டி, பரத் ராமமூர்த்தி, வேதாந் பட்டேல், வினய் ரெட்டி, கவுதம் ராகவன் என பலர் தேச முன்னேற்றத்திற்காக பணியாற்ற உள்ளனர்” என தெரிவித்துள்ளார் பைடனின் தெற்காசிய நாடுகளுக்கான இயக்குனர் நேஹா திவான். 

கடந்த இருபது ஆண்டுகளாக அமெரிக்க அரசு நிர்வாகத்தில் ஆசிய அமெரிக்கர்கள் மற்றும் பசிபிக் தீவுகளை சேர்ந்தவர்களின் பங்களிப்பு இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.