செய்தியாளர்: வெற்றிச்செல்வி
உலகம் முழுவதும் மின்சார வாகனங்களுக்கான சந்தை கடந்த சில மாதங்களாக பல்வேறு மாற்றங்களை சந்தித்து வந்தது. இந்த நிலையில், கடந்த அக்டோபர் மாதத்தில் உலகம் முழுவதும் 20.9 லட்சம் மின்சார வாகனங்கள் விற்பனை ஆகியுள்ளதாக இங்கிலாந்தை சேர்ந்த benchmark mineral inteligence என்ற ஆய்வு நிறுவனம் தரவுகளை வெளியிட்டுள்ளது. இதன்மூலம் விற்பனை எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட 8 சதவீதம் அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது.
நடப்பு ஆண்டின் முதல் 10 மாதங்களில் மட்டும் உலகம் முழுவதும் 1 கோடியே 75 லட்சம் மின்சார வாகனங்கள் விற்பனையாகி உள்ளன. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 5 சதவீதம் அதிகமாகும். இந்த வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கும் பிராந்தியமாக ஐரோப்பா உள்ளது. கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் ஐரோப்பாவில் 5.1 லட்சம் மின்சார வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. கடந்த ஆண்டை ஒப்பிட்டுப் பார்த்தால், சுமார் 36 சதவீதம் அதிகரித்திருக்கிறது.
ஐரோப்பிய நாடுகளில் மின்சார வாகனங்களை ஊக்குவிப்பதற்காகப் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. வாகனங்களை வாங்குவோருக்கு வழங்கப்படும் மானியம், பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் ஏற்பட்டுள்ள உயர்வு, புதிய மின்சார வாகன மாடல்களின் அறிமுகம் ஆகியவை மக்களின் கவனத்தை இந்தப் பக்கம் திருப்பியுள்ளன.
குறிப்பாக, ஜெர்மனியில் மின்சார வாகன விற்பனை கடந்த ஆண்டைவிட கிட்டத்தட்ட 80 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால் ஐரோப்பியச் சந்தையின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் ஜெர்மனி முக்கியப் பங்களிப்பை வழங்கியுள்ளது. அதேபோல், வட அமெரிக்க மின்சார வாகனச் சந்தையிலும் மீண்டும் விற்பனை வேகம் அதிகரித்திருக்கிறது. அக்டோபர் மாதத்தில் வட அமெரிக்காவில் மட்டும் 1.3 லட்சம் மின்சார வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. இது கடந்த ஆண்டைவிட 24 சதவீதம் அதிகமாகும். கடந்த சில மாதங்களாக மந்தநிலையைச் சந்தித்துவந்த அமெரிக்கச் சந்தையில் இந்த வளர்ச்சி முக்கியத்துவம் வாய்ந்ததாக உருவெடுத்துள்ளது.
உலகின் மிகப்பெரிய மின்சார வாகனச் சந்தையான சீனாவில், அக்டோபர் மாத விற்பனை 12 சதவீதம் சரிந்து 11.4 லட்சமாகப் பதிவாகியுள்ளது. ஆனால், உள்நாட்டு விற்பனை குறைந்தாலும் சீன நிறுவனங்களின் ஏற்றுமதி அதிகரித்துள்ளது. அக்டோபரில் மட்டும் சீனாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட புதிய எரிசக்தி பயணிகள் வாகனங்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 6 லட்சத்தை எட்டியுள்ளது. இது, இதுவரை இல்லாத மாதாந்திர உச்சமாகும். இதில் முழுமையான மின்சார வாகனங்களும், Plug-in Hybrid வாகனங்களும் அடங்கும்.
இதேபோல், சீனா, ஐரோப்பா, வட அமெரிக்கா ஆகியவற்றைத் தவிர்த்த மற்ற நாடுகளிலும் மின்சார வாகன விற்பனை 85 சதவீதம் அதிகரித்துள்ளது. குறிப்பாக, ஆஸ்திரேலியாவில் விற்பனை 200 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. பிரேசில் உள்ளிட்ட நாடுகளிலும் விற்பனை வளர்ச்சியடைந்துள்ளது.
இப்படி உலகின் முக்கியச் சந்தைகளில் வெவ்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுவரும் நிலையில், மின்சார வாகனத் துறையில் அடுத்தகட்டப் போட்டியும் தீவிரமடைந்துள்ளது.