2025 recap 10 wars and protests x page
உலகம்

2025 Recap | உலகில் கவனத்தை ஈர்த்த போர்கள்.. போராட்டங்கள்.. ஆட்சி மாற்றங்கள்!

2025ஆம் ஆண்டு போர்களும் அரசுகளுக்கு எதிரான போராட்டங்களும் ஆட்சி மாற்றங்களும் மோசமான விபத்துகளும் நிறைந்த ஆண்டாகவே அமைந்தது. இந்தாண்டின் முக்கிய நிகழ்வுகளை சுருக்கமாக காணலாம்

PT WEB

2025ஆம் ஆண்டு போர்களும் அரசுகளுக்கு எதிரான போராட்டங்களும் ஆட்சி மாற்றங்களும் மோசமான விபத்துகளும் நிறைந்த ஆண்டாகவே அமைந்தது. இந்தாண்டின் முக்கிய நிகழ்வுகளை சுருக்கமாக காணலாம்.

இந்த இணைப்பில் இந்த ஆண்டின் முக்கிய நிகழ்வுகளை சுருக்கமாக பார்க்கலாம்.

உலக கத்தோலிக்கர்களின் தலைவரான 14ஆம் போப் லியோ

14ஆம் போப் லியோ

உலக கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவரான போப் பிரான்சிஸ் உடல் நலக்குறைவால் மறைந்தார். இதன் பின் ராபர்ட் பிரான்சிஸ் பிரிவோஸ்ட் புதிய போப் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார். வடஅமெரிக்க நாடு ஒன்றிலிருந்து போப் ஆன முதல் நபர் ஆனார் 14ஆம் போப் லியோ.

2025 கவிழ்ந்த அரியாசனங்கள்.. புதிய தலைவர்களை கண்ட 65 நாடுகள்

trump

2025ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 65 நாடுகள் புதிய தலைவர்களை கண்டன. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஆண்டு தொடக்கத்தில் 2ஆம் முறையாக அதிபரான நிலையில் ஜப்பான், ஜெர்மனி, தென்கொரியா, கனடா, தாய்லாந்து, நேபாளம் போன்ற நாடுகள் புதிய தலைவர்களை கண்டன. ஜஸ்டின் ட்ரூடோ போன்ற தலைவர்கள் அரியணையில் இருந்து இறங்கினர்

ஆட்சியாளர்களுக்கு எதிராக கொந்தளிப்புகள்..

nepal protest

ஆட்சியில் இருப்பவர்களுக்கு எதிராக கொந்தளிப்புகளுக்கும் பஞ்சம் இல்லை. ட்ரம்ப்பின் குடியேற்ற கொள்கைகள், பணி நீக்க நடவடிக்கைகளை கண்டித்து அமெரிக்காவே அதிரும் போராட்டங்கள் நடைபெற்றன. நேபாளத்தில் ஜென் zக்களின் போராட்டத்தால் பிரதமர் கே.பி.ஓலி பதவியை விட்டே இறங்கினார். இந்தோனேசியா, பிரேசில், துருக்கி, பிலிப்பைன்ஸ், பல்கேரியா, மடகாஸ்கர் போன்ற நாடுகளில் ஆட்சியாளர்களுக்கு எதிராக போராட்டங்கள் வெடித்தன

தீவிரமடைந்த பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மோதல்

pak - afgan war

ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியாவின் உக்கிர தாக்குதலை சந்தித்த பாகிஸ்தான் அடுத்தது ஆப்கானிஸ்தானிடமும் மோதவேண்டி வந்தது. பேச்சுவார்த்தைகள் நடத்தியும் உரசல்கள் முடிவுக்கு வரவில்லை. பாகிஸ்தானின் நெருக்கடி அதிகரித்த நிலையில் ஆப்கானிய தாலிபான் நிர்வாகம் இந்தியாவுடன் மேலும் நெருங்கிவந்தது. இந்தியாவின் மற்றொரு அண்டை நாடான வங்கதேசத்திலும் வன்முறைகள் மீண்டும் தலைதூக்கின. இதற்கிடையே தேர்தல் அறிவிப்பு வெளியானது

உலகை அதிரவைத்த விபத்துகள்

Nigeria fuel tanker exploded

போர்கள் ஒருபுறம் கவலைப்பட வைத்தன என்றால் விபத்துகளும் வேதனையை தந்தன. நைஜீரியாவில் எண்ணெய் டேங்கர் வெடித்ததில் 98 பேர் கருகிச் சாம்பலாகினர். அமெரிக்காவில் பிளாக்ஹாக் ஹெலிகாப்டர் விழுந்ததில் 64 உயிர்கள் பறிபோயின. சவுதி அரேபியாவின் மெக்கா அருகே பேருந்து தீப்பிடித்ததில் 45 பேர் உயிரிழந்தனர். ஹாங்காங்கில் அடுக்குமாடி குடியிருப்புகளில் ஏற்பட்ட தீ விபத்தில் 151 பேர் இறந்தனர்.

சட்டவிரோத குடியேறிகளுக்கு எதிராகப் போராட்டம்

அமெரிக்கா கைது நடவடிக்கை

சட்டவிரோத குடியேறிகள் மீதான நடவடிக்கை உலகெங்கும் தீவிரமடைந்தது. சட்டவிரோத குடியேறிகளை கைவிலங்கிட்டு அதிபர் ட்ரம்ப் வெளியேற்றிய நிலையில் அவரை எதிர்த்து அமெரிக்காவில் போராட்டங்கள் தலைதூக்கின. பிரிட்டனிலும் சட்டவிரோத குடியேறிகளுக்கு எதிராக குரல்கள் வலுத்தன. ஜெர்மனி, அயர்லாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் அந்நியர்களுக்கு எதிரான போராட்டங்களை மண்ணின் மைந்தர்கள் முன்னெடுத்தனர்.

காலநிலை பிரச்னைகளுக்கு தீர்வை நோக்கி நகர்வு

பிரேசில் காலநிலை மாநாடு

போர்களும் போராட்டங்களும் என உலகமே அதிர்ந்தபோதும் எதிர்காலம் குறித்து நம்பிக்கை தரும் நிகழ்வு ஒன்றும் நடைபெற்றது. பருவநிலை மாற்ற பிரச்சினையை எதிர்கொள்வது தொடர்பான மாநாடு உலகின் நுரையீரலாக திகழும் அமேசான் காடுகளின் நுழைவாயிற் பகுதியில் நடைபெற்றது. வனப்பகுதிகளை அழிக்காமல் காக்க ஏழை நாடுகளுக்கு உதவ நிதி போன்ற முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

சீன மாநாட்டில் முப்பெரும் நாடுகளின்

புதின், மோடி, ஜின்பிங்

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் அதிரடிகள் உலகின் அதிகார சமன்பாடுகளையே மாற்றியது. இந்தியா, ரஷ்யா, சீனா மிகவும் நெருங்கிவந்தன. சீன மாநாட்டில் 3 நாடுகளின் தலைவர்கள் ஒருங்கே நின்றது ஒட்டுமொத்த உலகின் கவனத்தை ஈர்த்தது. மறுபுறம் சீனாவுடன் நெருக்கமாக இருந்த பாகிஸ்தானை தன் பக்கம் இழுத்தார் ட்ரம்ப். பாகிஸ்தானிய தளபதியை வெள்ளை மாளிகைக்கு அழைத்து விருந்து அளித்து அரிய வகை கனிமங்களை பாகிஸ்தானில் இருந்துஎடுக்க ஒப்பந்தம் போட்டார் ட்ரம்ப்.

இடைவிடாது நீடிக்கும் ரஷ்யா - உக்ரைன் போர்

ஜெலன்ஸ்கி, ட்ரம்ப், புதின்

தொடர்ந்து 3ஆவது ஆண்டாக உக்ரைனை ரஷ்யா குண்டுமழையால் துளைத்தது ரஷ்யா. உக்ரைனும் சளைக்காமல் பதிலடி கொடுத்தது. போரை முடிக்க அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை வெள்ளை மாளிகைக்கு அழைத்து அதட்டிய விதம் உலகமே இதற்குமுன் கண்டிராதது. மறுபுறம் புடினிடம் ட்ரம்ப்பின் ராஜதந்திரங்கள் பலிக்கவில்லை. கெஞ்சி பார்த்தார்... பொருளாதார நெருக்கடிகள் கொடுத்து மிஞ்சியும் பார்த்தார், கடைசியாக நேரிலும் பேசிப் பார்த்தார். எதுவும் உதவாத நிலையில் உக்ரைனும் ரஷ்யாவும் விடாக்கண்டன் கொடாக்கண்டனாக மோதலை தொடர்கின்றன

2025இன் அடையாளமாக மாறிய உக்கிரபோர்கள்!

gaza israel war

உக்கிரமான போர்கள் 2025இன் அழுத்தமான தடமாக அமைந்து விட்டது. காஸாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலும் அதனால் மக்கள் பட்டபாடும் வரலாற்றின் இருண்ட பக்கங்களில் இடம்பிடித்துவிட்டன. ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலும் அதனுடன் அமெரிக்காவும் சேர்ந்துகொண்டதும் 3ஆம் உலகப்போர் வந்து விடுமோ என்ற பீதியை ஏற்படுத்தியது.