காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய இராணுவம் மே 7-ஆம் தேதி “ஆபரஷன் சிந்தூர்” நடவடிக்கையை மேற்கொண்டது. தொடர்ச்சியாக 4 நாட்கள் நடைபெற்ற இந்தத் தாக்குதலில் பல தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும், 65 ஆண்டுகால சிந்து நதி நீர் ஒப்பதமும் நிறுத்திவைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து மே 10 ஆம் தேதி தாக்குதல் நிறுத்தம் தொடர்பான அறிவிப்பு வெளியானது. சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தம் என்பது பாகிஸ்தானுக்கு பெரும் பாதிப்பையும், பாகிஸ்தானின் கடும் தண்ணீர் பஞ்சத்தையும் ஏற்படுத்தும் அளவிற்கு மோசமான விளைவை ஏற்படுத்தும்.
இந்தநிலையில், ஐ.நா. கூட்டத்தில் பேசிய பாகிஸ்தான் பிரதிநிதி, “தண்ணீர் என்பது உயிர். போரின் ஆயுதம் அல்ல” என்று தெரிவித்தார். இதற்கு பதிலளித்த ஐநாவிற்கான இந்தியாவின் நிரந்திர பர்வதவேனி ஹரிஷ் பாகிஸ்தானை கடுமையான சாடியுள்ளார்.
இதுகுறித்து தெரிவித்த அவர், இந்தியா எப்போதும் ஒரு பொறுப்புள்ள நாடாக செயல்பட்டு வருகிறது என்று தெரிவித்து நான்கு விஷயங்களை குறித்து பேசினார்.
அதில், “முதலாவது இந்தியா 65 ஆண்டுகளுக்கு முன்பு நல்ல எண்ணத்துடன் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. ஆறரை தசாப்தங்களாக பாகிஸ்தான் மூன்று போர்களையும் ஆயிரக்கணக்கான பயங்கரவாதத் தாக்குதல்களையும் இந்தியா மீது நடத்தி அந்த ஒப்பந்தத்தை மீறியது. கடந்த நான்கு தசாப்தங்களில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 20,000 க்கும் மேற்பட்ட இந்தியர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இந்த காலக்கட்டத்தில் இந்தியா அசாதாரண பொறுமையும் பெருந்தன்மையும் காட்டியுள்ளது.
இந்தியாவில், பாகிஸ்தான் அரசால் ஆதரிக்கப்படும் எல்லை தாண்டிய பயங்கரவாதம் பொதுமக்களின் உயிர்கள், மத நல்லிணக்கம் மற்றும் பொருளாதார செழிப்பு என அனைத்திலும் பாதிப்பை உண்டாக்க முயல்கிறது.
இரண்டாவதாக, இந்த 65 ஆண்டுகளில், எல்லை தாண்டிய பயங்கரவாத தாக்குதல்கள் மூலம் அதிகரித்து வரும் பாதுகாப்பு கவலைகள் மட்டுமல்லாமல், சுத்தமான எரிசக்தி, காலநிலை மாற்றம் மற்றும் மக்கள்தொகை மாற்றம் என அனைத்திலும் மாற்றம் ஏற்பட்டது.
2012 ஆம் ஆண்டு, ஜம்மு காஷ்மீரில் உள்ள துல்புல் வழிசெலுத்தல் திட்டத்தின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த இழிவான செயல்கள் எங்கள் திட்டங்களின் பாதுகாப்பிற்கும் பொதுமக்களின் உயிருக்கும் தொடர்ந்து ஆபத்தை விளைவிக்கின்றன.
மூன்றாவதாக, கடந்த இரண்டு ஆண்டுகளில் பல சந்தர்ப்பங்களில் மாற்றங்களைப் பற்றி விவாதிக்க பாகிஸ்தானை இந்தியா முறையாகக் கேட்டுள்ளது. இருப்பினும், பாகிஸ்தான் இவற்றைத் தொடர்ந்து நிராகரித்து வருகிறது.
நான்காவது, இந்தப் பின்னணியில்தான், பயங்கரவாதத்தின் உலகளாவிய மையமாக இருக்கும் பாகிஸ்தான், எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கான தனது ஆதரவை நிறுத்தம்வரை இந்த ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.