உலகளவில் கொரோனாவால் ஒரே நாளில் 2 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் படிப்படியாக உலகம் முழுவதும் பரவி தனது கோர முகத்தைக் காட்டிக் கொண்டிருக்கிறது. அமெரிக்கா, இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் நாள்தோறும் மக்கள் கொத்துக் கொத்தாக உயிரிழந்து வருகின்றனர்.
நேற்று உயிரிழப்பு 16 ஆயிரமாக இருந்த நிலையில், ஒரே நாளில் உலகளவில் சுமார் 2 ஆயிரம் பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். இதனால் உலகளவில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 18 ஆயிரமாக அதிகரித்துள்ளது. அதாவது 18,810 பேர் கொரோனாவுக்கு உலகளவில் உயிரிழந்துள்ளனர்.
197 நாடுகளுக்கு பரவிய கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4, 21, 413ஆக அதிகரித்துள்ளது. 4 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நிலையில் 4ல் ஒரு பங்காக 1,08, 388 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். ஸ்பெயினில் புதிதாக 680 பேர் இறந்ததால் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,991ஆக உயர்ந்துள்ளது. இத்தாலியில் கொரோனாவுக்கு புதிதாக 743 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 6,820 ஆக அதிகரித்துள்ளது.
ஈரானில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை இரண்டாயிரத்தை நெருங்கியுள்ளது. பிரான்ஸில் கொரோனா உயிரிழப்பு ஆயிரத்தை தாண்டியுள்ளது. இங்கிலாந்தில் 422 பேரும், நெதர்லாந்தில் 276 பேரும் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் புதிதாக 145 பேர் உயிரிழந்ததையடுத்து அங்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 698 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவை பொருத்தவரை இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் மதுரையை சேர்ந்த நபர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.