அமெரிக்காவில் வணிக வளாகம் ஒன்றில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 20 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில், எல் பஸோ (EL PASO) என்ற இடத்தில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் துப்பாக்கியுடன் நுழைந்த நபர்கள் அங்கிருந்த பொதுமக்களை நோக்கி சராமாரியாகச் சுட்டனர். அப்போது, பணியில் இருந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதனால் அங்கு அசாதாராண சூழல் நிலவியது. துப்பாக்கிச் சூட்டில் 20 பேர் கொல்லப்பட்டதாகவும், 40க்கும் அதிகமானோர் காயமடைந்திருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளன.
சந்தேகத்தின் பேரில், டெக்ஸாஸ் பகுதியைச் சேர்ந்த பேட்ரிக் க்ரூசியஸ் என்ற இளைஞரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், துப்பாக்கிச் சூடு நடந்த வணிக வளாகத்திற்கு பொதுமக்கள் தற்சமயம் வரவேண்டாம் என்றும் எச்சரித்துள்ளனர். துப்பாக்கிச் சூடு குறித்து அதிபர் டிரம்பிற்கு விளக்கம் அளித்துள்ளதாகவும், வெள்ளைமாளிகை நிலைமை யை கண்காணித்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், இந்நிகழ்வு மிகவும் மோசமானது என்று கூறியுள்ளார். அனைத்து உதவிகளும் செய்ய அதிகாரிகளுக்கு உறுதியளித்திருப்பதாகவும், கடவுள் உங்களுடன் இருப்பதாகவும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.