உலகம்

“20 மில்லியன் மாணவிகள் மீண்டும் பள்ளிக்கு வரமுடியாமல் போகலாம்” - மலாலா

“20 மில்லியன் மாணவிகள் மீண்டும் பள்ளிக்கு வரமுடியாமல் போகலாம்” - மலாலா

webteam

கொரோனாவுக்கு பின் 20 மில்லியன் மாணவிகள் மீண்டும் பள்ளிக்கு வரமுடியாத சூழல் இருக்கும் என மலாலா யூசப்சையி தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானைச் சேர்ந்தவர் மலாலா யூசப்சையி. இவர் குழந்தைகளின் கல்வி உரிமைக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். தனது 17வது வயதிலேயே அமைதிக்கான நோபல் பரிசை வென்றவர்.

இந்நிலையில் நியூயார்க்கில் நடைபெற்ற ஐநா பொது சபையில் பேசிய மலாலா, கொரோனா பாதிப்பு முடிவுக்கு வந்த பிறகு, சுமார் 20 மில்லியன் மாணவிகள் பள்ளிக்கு திரும்ப முடியாத சூழல் இருக்கும் எனத் தெரிவித்துள்ளார். மேலும், “கொரோனா பாதிப்பால், கல்வி உரிமை தொடர்பான தங்கள் இலக்கை அடைவதில், பின்னடைவு ஏற்பட்டுள்ளது. பெண்களுக்கான கல்வி உரிமையில் இது பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

கல்விக்கான போதிய நிதி கிடைப்பதிலும், சிக்கல் எழுந்துள்ளது. அனைத்து பெண் குழந்தைகளுக்கும் முறையான கல்வி கிடைக்க ஐ.நா சபை எப்போது நடவடிக்கை எடுக்கும்? ஒவ்வொரு குழந்தைக்கும் 12 வருட தரமான கல்வியைக் கொடுக்க தேவையான நிதியை எப்போது வழங்குவீர்கள்? புலம்பெயர்ந்தோரை பாதுகாப்பதற்கு எப்போது முன்னுரிமை அளிக்கப்படும்? அமைதிக்கு எப்போது முன்னுரிமை அளிக்கப்படும்?” என கேள்வி எழுப்பினார்.