உலகம்

நேபாளம்: ஆற்றங்கரையில் இறந்துகிடந்த காண்டாமிருகங்கள் - கடத்தல்காரர்களால் கொல்லப்பட்டதா?

Sinekadhara

சித்வான் தேசியப் பூங்காவைச் சேர்ந்த 2 காண்டாமிருங்கள் நாராயணி நதியின் கரையில் சடலமாக கண்டறியப்பட்டுள்ளது. கடத்தல்காரர்களால் அவை கொல்லப்பட்டதா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. 

நேபாளத்திலுள்ள கிழக்கு நாவால்பாரசிக்கு கீழ்வரும் மத்யபிந்து பஞ்சாயத்து வார்டுக்கு 2க்கு உட்பட்ட பகுதியில் நாராயணி ஆற்றங்கரையில் இரண்டு காண்டாமிருகங்கள் இறந்துகிடந்தது. இதனைப் பார்த்த உள்ளூர்வாசிகள் இதுகுறித்து சித்வான் தேசியப் பூங்கா மற்றும் நேபாள ராணுவத்துக்கு தகவல் அளித்துள்ளனர். இதனையடுத்து அங்கு சென்ற பூங்கா தகவல் தொடர்பு அதிகாரி கணேஷ் திவாரி, இறந்துபோனவைகளில் ஒன்று 14 வயதான பெண் காண்டாமிருகம் எனவும், மற்றொன்று 4 வயதான ஆண் காண்டாமிருகம் எனவும் உறுதிப்படுத்தியுள்ளார்.

கொல்லப்பட்ட பெண் காண்டாமிருகத்தின் அருகே துண்டிக்கப்பட்ட நிலையில் அதன் கொம்பு கிடந்ததால், ஒருவேளை கடத்தல்காரர்கள் கொலை செய்திருக்கலாம் என பூங்கா நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.

காண்டாமிருகங்கள் மீது மின்சாரம் செலுத்தி கொலை செய்யப்பட்டிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார் திவாரி.

2022 - 23 நிதியாண்டில் மட்டும் சித்வான் தேசியப் பூங்காவைச் சேர்ந்த 10 ஒற்றைக்கொம்பு காண்டாமிருகங்கள் இறந்துள்ளன. அவற்றில் 6 காண்டாமிருகங்கள் ஆண்டில் முதல்பாதியில் இறந்துள்ளன. 7 இயற்கை காரணிகளால் இறந்தவை. ஒன்று மின்சாரம் தாக்கி இறந்தது. தற்போது மற்ற இரண்டும் கடத்தல்காரர்களால் கொல்லப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார் கணேஷ் திவாரி.