இலங்கையில் 6 இடங்களில் குண்டு வெடிப்பு நடத்தப்பட்ட நிலையில், மேலும் 2 இரண்டு இடங்களில் குண்டு வெடித்துள்ளது.
ஈஸ்டர் தினமான இன்று, இலங்கை தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனையில் கிறிஸ்வதவர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது யாரும் எதிர்பாராதவிதமாக சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு நடந்தது. நான்கு தேவாலயங்களில் ஒரே நேரத்தில் குண்டுவெடிப்பு நடந்தது. கொச்சிக்கடை தேவாலயம், கட்டுவப்பிட்டிய தேவாலயம், கிங்ஸ்பெரி தேவாலயம், பட்டிகலோயா வில் உள்ள தேவாலயம் ஆகிய இடங்களில் குண்டுவெடித்தது. இதுதவிர ஷாங்ரி லா, சின்னமன் கிராண்ட் ஆகிய ஹோட்டல்களிலும் குண்டுவெடிப்பு நடந்துள்ளது. இந்த ஆறு இடங்களில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு சம்பவத்தால் 140க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் இலங்கை உட்பட உலகம் முழுவதும் துயரத்தை ஏற்படுத்தியது. அத்துடன் பலி எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே சென்றது. உலகத் தலைவர்கள் பலரும் இந்த சம்பவத்திற்கு வருத்தங்களையும், கண்டனங்களையும் தெரிவித்து வந்தனர். இந்நிலையில், இலங்கையில் தெஹிவளை என்ற இடத்தில் உள்ள ஹோட்டலில் 7வது குண்டு வெடித்ததாகவும், குண்டு வெடிப்பில் 2 பேர் உயிரிழந்ததாகவும் தகவல் வெளியாகியது. இதனால் இலங்கை அரசு அங்கு ஊரங்கு உத்தரவு பிறப்பித்தது.
அத்துடன் குண்டு வெடிப்பு நடத்தும் நபர்களை முடக்குவதற்காக இணைய சேவை, சமூக வலைத்தளங்கள் மற்றும் செல்போன் மெசேஜ் சேவைகளும் முடக்கப்பட்டுள்ளன. தொடர் குண்டு வெடிப்பால் மக்கள் அங்கு பதட்டத்துடனும், அச்ச உணர்வுடனும் உறைந்தனர். இந்த சூழலில் அங்கு 8வது குண்டு வெடித்துள்ளது. தெமட்டகோடாவில் உள்ள குடியிருப்பு பகுதியில் வெடித்த 8வது குண்டால், உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் எனப்படுகிறது. இதுவரை 185க்கும் அதிகமானோர் அங்கு உயிரிழந்திருப்பதாக கூறப்படுகிறது.