உக்ரேனிய விமான நிறுவனத்தால் இயக்கப்படும் அன்டோனோவ் சரக்கு விமானம் கிரீஸில் உள்ள கவாலா நகருக்கு அருகே நேற்று விபத்துக்குள்ளானது. விபத்து நடந்த 2 மணி நேரங்களுக்கு தீப்பிழம்புகளை பார்த்ததாகவும் வெடிச்சத்தம் கேட்டதாகவும் உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.
செர்பியாவில் இருந்து ஜோர்டானுக்கு சென்று கொண்டிருந்த An-12 விமானத்தின் எஞ்சின் ஒன்றில் பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக அவ்விமானத்தின் பைலட் கிரீஸின் சிவில் ஏவியேஷன் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். விமானத்தை அவசரமாக தரையிறக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்த அதிகாரிகள், தெசலோனிகி அல்லது கவாலா ஆகிய இரு விமான நிலையங்களில் ஏதேனும் ஒன்றின் விமானத்தை தரையிறக்க அனுமதி அளித்துள்ளனர்.
ஆனால் திடீரென விமானத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. விமான நிலையத்திற்கு மேற்கே 40 கிலோமீட்டர் தொலைவில் விமானம் எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளானது. “விபத்து நடந்த இடத்திலிருந்து நான் 300 மீட்டர் தொலைவில் இருக்கிறேன். பல நிமிடங்களாக நாங்கள் வெடிப்புச் சத்தங்களைக் கேட்டுக்கொண்டிருந்தோம். விபத்தைத் தொடர்ந்து இரண்டு மணி நேரம் வெடிக்கும் சத்தம் கேட்டது" என்று பகாயோ (Paggaio) நகராட்சியின் மேயர் Filippos Anastassiadis தெரிவித்தார்.
விமானத்தில் எட்டு பேர் இருந்ததாகவும், அதில் 12 டன் ஆபத்தான பொருட்கள் இருந்ததாகவும், அவை பெரும்பாலும் வெடிபொருட்கள் என கிரேக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன. விபத்து நடந்த இடத்தில் இருந்து கடும் துர்நாற்றம் வீசுவதால், முன்னெச்சரிக்கையாக, நகராட்சி, காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறை அதிகாரிகள் அடங்கிய ஒருங்கிணைப்புக் குழு விபத்து நடந்த இடத்திற்கு அருகில் உள்ள பகுதிகளில் வசிப்பவர்களை இரவு முழுவதும் ஜன்னல்களை மூடி வைக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
சுமார் 400 மீட்டர் சுற்றளவில் விபத்துப் பகுதியை தீயணைப்பு துறையினர் சுற்றி வளைத்துள்ளனர். கிரீஸின் அணுசக்தி ஆணையத்தின் நிபுணர்கள் விபத்துப் பகுதிக்கு வந்தவுடன் வெடிப் பொருட்களை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்படும் என கூறப்பட்டுள்ளது.