உலகம்

“அடர்ந்த காட்டில் 25 நாட்கள்; மழைநீரே உணவு”-அமேசானில் தொலைந்த சிறுவர்களின் பகீர் அனுபவம்!

webteam

அமேசான் மழைக்காடுகளில் காணாமல் போன பிரேசிலை சேர்ந்த இரண்டு சிறுவர்கள், 25 நாட்களுக்கு பின் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

பிரேசிலை சேர்ந்த முரா பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்த சகோரதரர் கிளைசன் மற்றும் கிளைகோ. கிளைசனுக்கு 9 வயது. கிளாகோவுக்கு 7 வயது. இருவரும் அமேசான் நதிக்கருக்கே உள்ள மனிகோர் பகுதியில் வசித்து வந்தனர். கடந்த மாதம் இருவரும் பறவைகளை வேட்டையாட தங்கள் கிராமத்தை விட்டு வெளியேறி அடர்ந்த மழைக்காடுகளுக்குள் சென்றனர். அதன் பின்னர் இருவரும் தங்கள் வீட்டிற்கு திரும்பவில்லை. தங்கள் மகன்களை காணவில்லை என பெற்றோர் புகார் அளித்தனர்.

நிகழ்விடத்திற்கு வந்த காவலர்கள் மீட்புப் படையினரையும் வரவழைத்து தேடுதல் வேட்டையை துவங்கினர். உள்ளூர் மக்கள், மீட்புப்படையினர், காவல்துறையினர் எனப் பலர் இணைந்த பிரமாண்ட தேடுதல் வேட்டை துவங்கியது. அடர்ந்த அமேசான் மழைக்காடுகளில் 2 வாரங்களுக்கு மேல் தேடியும் இரு சிறுவர்களையும் கண்டுபிடிக்க இயலவில்லை. அவர்கள் அந்த காட்டுப் பகுதிகளுக்குள் வந்து சென்றதற்கான ஆதாரங்களும் கிடைக்கவில்லை. இதனால் காவல்துறையினர் தேடுதல் வேட்டையை கைவிட்டனர். ஆனால் உள்ளூர் பழங்குடியினர் இரு சிறுவர்களையும் தேடிக்கொண்டிருந்தனர்.

ஒரு நாள் விறகு சேகரிக்கும் குடும்ப நண்பர் தற்செயலாக சிறுவர்களை அடர்ந்த காட்டில் கண்டுபிடித்தார். காணாமல் போன இடத்தில் இருந்து சுமார் 35 கிலோமீட்டர் தொலைவில் 25 நாட்களுக்குப் பிறகு இருவரும் கண்டுபிடிக்கப்பட்டனர். தங்களை சுற்றி பிரமாண்ட அமேசான் ஆறு ஓடிக் கொண்டிருந்த போதிலும், இருவரும் குடிக்க “உகந்த” தண்ணீர் கூட கிடைக்காமல் சிரமப்பட்டுள்ளனர். திடீரென பெய்யும் மழைநீரை மட்டுமே குடித்து உயிர் பிழைத்துள்ளனர். காட்டில் கிடைத்த சிறு பழங்களை விஷமாக இருக்குமோ என்ற அச்சத்துடன் சாப்பிட்டு உயிர் பிழைத்ததாக தெரிவித்துள்ளனர். 7 வயது சிறுவன் கிளைகோ உடல் மெலிந்து நடக்கவே முடியாத சூழல் ஏற்பட்ட போது, 9 வயதான கிளைசன் தனது சகோதரனை தோளில் சுமந்து சென்றது தெரியவந்துள்ளது.,

தற்போது இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பல நாட்களாக சரியான தண்ணீர் மற்றும் உணவு எடுத்துக் கொள்ளாததால் இரு சிறுவர்களும் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் கடுமையான நீரிழப்பு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது அவர்கள் நலமாக இருப்பதாகவும் சிகிச்சை தொடர்வதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.