உலகம்

கொரோனா பாதிப்பு நோயாளியை சுட்டுக்கொல்ல உத்தரவிட்டாரா வட கொரியா அதிபர்..?

கொரோனா பாதிப்பு நோயாளியை சுட்டுக்கொல்ல உத்தரவிட்டாரா வட கொரியா அதிபர்..?

webteam

கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நோயாளியை வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன் சுட்டுக்கொல்ல உத்தரவிட்டதாக சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்ட தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சீனாவில் உள்ள வுஹான் மாகாணத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் இன்று உலகையே மிரட்டும் கொடூரமாக மாறியுள்ளது. சீனா மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளுக்குப் பரவியுள்ள இந்த வைரஸ் நோய்க்கு இதுவரை முழுமையாக மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இந்நிலையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலகளவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,004 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 80 ஆயிரத்தை நெருங்கியுள்ளது‌ . சீனாவைத் தவிர்த்து, ஜப்பான், ஹாங்காங், பிலிப்பைன்ஸ், பிரான்ஸ், தைவான் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட நாடுகளிலும் கொரோனா பரவியுள்ளது.

கொரோனா வைரஸால் சீன மக்கள் மட்டுமின்றி உலக நாடுகளும் அச்சத்தில் உறைந்துள்ளன. சீனாவிலிருந்து வரும் மக்களுக்கு இந்தியா உட்பட பல்வேறு நாடுகளும் தடை விதித்துள்ளன. சீனாவிலிருந்து முன்னதாக வந்த இந்தியர்கள் பலரையும் தீவிர சிகிச்சையில் இந்திய சுகாதாரத்துறை கண்காணித்து வருகிறது.

இந்நிலையில் @Secret_Beijing என்ற ட்விட்டர் கணக்கை மேற்கோள் காட்டி ஒரு தகவல் பகிரப்பட்டு வருகிறது. அதில் வட கொரியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளான முதல் நோயாளியை சுட்டுக்கொல்ல வட கொரிய அதிபர் கிம் ஜாங்-உன் அனுமதி அளித்தார் எனக் கூறப்பட்டுள்ளது. கிம் ஜாங்-உன் நாட்டின் உயர் அதிகாரிகளிடம் “கட்டுப்பாட்டுக்கு அப்பால் பரவி வரும் தொற்று நோய் வட கொரியாவிற்குள் நுழைந்தால், அது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்” என்று அறிவுறுத்தி இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தத் தகவலை இண்டர்நேஷனல் பிசினஸ் டைம்ஸ் கூட வெளியிட்டுள்ளது. ஆனால் தகவல் வெளியிட்டுள்ள பல செய்தி தளங்கள் உண்மை தன்னை குறித்து உறுதி செய்ய முடியவில்லை என்றும் கூறியுள்ளன. ஆகவே இதனை அதிகாரப்பூர்வமான தகவல் என்று கூறமுடியாது.