iran reuters
உலகம்

1979 சம்பவம்.. ட்ரம்பின் தோல்வி.. இரட்டைக் கொண்டாட்டத்தில் ஈரான்!

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் குடியரசுக் கட்சி இடைக்காலத் தேர்தலில் பின்னடைவைச் சந்தித்துள்ள நிலையில், இதனை ஈரான் தனது வெற்றியாக கொண்டாடி வருகிறது.

PT WEB

செய்தியாளர் - M. மீரா

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் குடியரசுக் கட்சி இடைக்காலத் தேர்தலில் பின்னடைவைச் சந்தித்துள்ள நிலையில், இதனை ஈரான் தனது வெற்றியாக கொண்டாடி வருகிறது. அந்நாட்டின் தெஹ்ரான் வீதிகளில் அதிபர் ட்ரம்ப், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உள்ளிட்ட தலைவர்களின் உருவங்களைக் கொண்ட பிரம்மாண்ட பேனர்களை எரித்தும், அவர்களின் உருவப் பொம்மைகளைச் சங்கிலியால் கட்டி ஊர்வலமாக எடுத்துச் சென்றும் எதிர்ப்பை வெளிப்படுத்தி கொண்டாடி வருகிறார்கள்.

Iran

ஈரான் தலைநகரான தெஹ்ரானில் நேற்று (நவம்பர் 4-ம் தேதி) எங்கெலாப் சதுக்கத்தில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர். ட்ரம்ப், அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மற்றும் அமெரிக்காவின் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் ஆகியோரின் உருவங்கள் இடம்பெற்ற பிரம்மாண்ட பேனரைப் போராட்டக்காரர்கள் தீயிட்டு எரித்தனர்.

தெஹ்ரானின் முக்கியப் பகுதிகளில் ட்ரம்பை சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் நிற்பது போன்ற பிரம்மாண்ட விளம்பரப் பதாகைகளும் வைக்கப்பட்டுள்ளன. அதில், ’ட்ரம்பைக் கொல்வோம்’ என்ற நேரடி மிரட்டல் வாசகமும் இடம்பெற்றுள்ளது.

மற்றொரு பதாகையில் ட்ரம்ப், ஜே.டி. வான்ஸ், ஸ்டீவ் விட்காஃப் மற்றும் நெதன்யாகு ஆகிய நால்வரும் காயமடைந்த முகங்களுடனும், கிழிந்த ஆடைகளுடனும் சித்தரிக்கப்பட்டுள்ளனர்.

iran

1979-ம் ஆண்டு தெஹ்ரானில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தை ஈரானிய மாணவர்கள் கைப்பற்றியதன் நினைவு நாளும் நவம்பர் 4ஆம் தேதி அனுசரிக்கப்பட்டது. அப்போது 52 அமெரிக்கர்கள் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டு 444 நாட்கள் சிறை வைக்கப்பட்டனர். இந்தச் சம்பவத்துக்குப் பிறகு அமெரிக்கா - ஈரான் இடையிலான உறவு முற்றிலும் பாதிக்கப்பட்டது.

அமெரிக்கத் தேர்தலில் ட்ரம்பின் கட்சி சந்தித்த பின்னடைவு ஜனநாயகக் கட்சியினரின் வெற்றி மட்டுமல்ல என்றும், ஈரானிய மக்களின் உறுதியான எதிர்ப்புக்குக் கிடைத்த வெற்றி என்றும் ஈரானிய மக்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், அமெரிக்கத் தேர்தல் முடிவுகளை ஈரான் அரசு ட்ரம்பின் தலைமைக்கும், ஈரான் மீதான போர் நடவடிக்கைகளுக்கும் கிடைத்த அரசியல் பின்னடைவாகக் கருதி வரவேற்றுள்ளது.

ஆனால், தேர்தல் பின்னடைவைத் தொடர்ந்து ட்ரம்ப் தனது செல்வாக்கை மீண்டும் நிலைநிறுத்த ஈரான் மீது புதிய ராணுவத் தாக்குதலை நடத்தக்கூடும் என்ற அச்சமும் அந்நாட்டில் எழுந்துள்ளது. இதனால் ஈரான் தனது பாதுகாப்புப் படைகளை உஷார் நிலையில் வைத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.