உலகம்

பில் கேட்ஸ், ஜோ பைடனின் ட்விட்டர் கணக்குகளை முடக்கிய இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறை

EllusamyKarthik

ஜோ பைடன், பில் கேட்ஸ் என பிரபலங்களின் ட்விட்டர் கணக்குகளை முடக்கி, மோசடி செய்த 18 வயது இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பில் கேட்ஸ் என பல பிரபலங்களின் ட்விட்டர் கணக்குகளை முடக்கி, அதன் மூலம் 72.5 லட்ச ரூபாய் மோசடி செய்த 18 வயதேயான ஹேக்கர், கிரஹாம் இவான் கிளார்கிற்கு மூன்று ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்ட அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் நீதிமன்றம் மூன்று ஆண்டு சிறை விதித்துள்ளது. இந்த தண்டனையின்போது அவர் டிஜிட்டல் சாதனங்களை சில நிபந்தனைகளுடன் பயன்படுத்தலாம் எனத் தெரிவிக்கபட்டுள்ளது. 

கடந்த ஆகஸ்ட் முதல் அவர் சிறையில் உள்ளதால் அந்த நாட்களும் இந்த தண்டனையின் காலத்தில் கணக்கிடப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.