தனிநாடு கோரி போராடும் இயக்கங்கள் பாகிஸ்தானின் மிகப்பெரிய மாகாணமான பலுசிஸ்தானில் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. இந்த அமைப்புகளை ஒடுக்க பாகிஸ்தான் பல ஆண்டுகளாக போராடி வருகிறது. இதன் காரணமாக பலுசிஸ்தான் விடுதலை அமைப்புக்கும் பாகிஸ்தான் ராணுவத்துக்கும் அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது.
இந்த சூழலில் கடந்த ஒரு வருடமாக பாகிஸ்தான் ராணுவ தளங்களை குறிவைத்து பலுச் விடுதலை இராணுவத்தினர் பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். குறிப்பாக கடந்த மார்ச் மாதத்தில் பலூச் விடுதலை அமைப்பினர் ஒரே நேரத்தில் 12 இடங்களில் நடத்திய தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவம் நிலை குலைந்தது. இந்த தாக்குதலில் 50க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் ராணுவத்தினர் கொல்லப்பட்டதாக பலூச் விடுதலை அமைப்பு அறிவித்தது.
அதேபோல, கடந்த மாதம் நடத்தப்பட்ட தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தின் 12 கவச வாகனங்கள் அழிக்கப்பட்டு , 2 கண்காணிப்பு ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன என்றும், இந்த தாக்குதல்களில் 80-க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் மற்றும் உளவுத்துறைப் பணியாளர்கள் கொல்லப்பட்டனர் என்றும் பலூச் விடுதலை அமைப்பு கூறியிருந்தது.
இந்த நிலையில், கடந்த நவம்பர் 12-ம் தேதி பலூச் விடுதலைப் படையின் தற்கொலைப் படைப் பிரிவான 'மஜீத் பிரிகேட்' நடத்திய தாக்குதலில் 18 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக பலூச் விடுதலைப் படை அறிவித்துள்ளது. வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட மினி டிரக் (VBIED) மூலம் ராணுவ முகாமின் பிரதான நுழைவாயிலில் மோதிப் பெரும் வெடிப்பை ஏற்படுத்திய பின்னர், தொடர்ந்து முகாமுக்குள் நுழைந்து ராணுவ வீரர்கள் மீது சரமாரியாகத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
பலூச் கிளர்ச்சியாளர்கள் அமைத்திருந்த சுரங்கப் பாதைகளை அழிக்கும் நோக்கில் பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் 'ஆபரேஷன் ரத்-உல்-ஃபித்னா' (Operation Radd-ul-Fitna) என்ற பெயரில் புதன் மற்றும் வியாழன் ஆகிய இரு நாட்களும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த நடவடிக்கையின் போது 7 சுரங்கப் பாதைகளை அழித்ததாகவும், பெருமளவிலான ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களைப் பறிமுதல் செய்ததாகவும் பாதுகாப்புப் படையினர் தெரிவித்திருந்தனர். இதற்குப் பதிலடியாகவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.