உலகம்

உக்ரைனில் 17ஆவது நாளாக நீடிக்கும் போர் - என்னதான் நடக்கிறது உக்ரைன் மண்ணில் - ஓர் பார்வை

உக்ரைனில் 17ஆவது நாளாக நீடிக்கும் போர் - என்னதான் நடக்கிறது உக்ரைன் மண்ணில் - ஓர் பார்வை

sharpana

உக்ரைன்- ரஷ்யா போர் 17 ஆவது நாளாக நீடிக்கும் நிலையில், கடும் தாக்குதல் நடக்கும் மரியுபோலில், துருக்கி நாட்டவர் 86 பேர் தஞ்சமடைந்திருந்த மசூதி மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளதாக உக்ரைன் குற்றம்சாட்டியுள்ளது. மேலும், உக்ரைன் தலைநகர் கீவைச்சுற்றிலும் தாக்குதலை ரஷ்யப்படைகள் விரிவுபடுத்தியுள்ளன.

உக்ரைனின் கிழக்குப்பகுதி நகரான வோல்நோவாகா வில் கடந்த சில வாரங்களாக உக்ரைன் படைகளுக்கும், ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகளுக்கும் இடையேயான சண்டை தீவிரமாக நடந்துவந்தது. இடிந்து தகர்ந்து கிடக்கும் வீடுகள், நிலவறைகளுக்குள் பதுங்கிய வாழ்க்கை என தங்கள் வாழ்நாளின் மோசமான நாட்களை கடந்து கொண்டிருக்கிறார்கள் மக்கள். உள்ளூர் மருத்துவமனை உட்பட முக்கிய கட்டடங்கள் குண்டு வீச்சில் இடிந்து உருக்குலைந்து கிடக்கின்றன. வோல்நோவாகா நகரம் ஒரு உதாரணம்தான்.

சிரியா, செசன்யாவில் ரஷ்யா கையாண்ட உத்தியைப்போல இடைவிடாத தொடர் தாக்குதலை உக்ரைனின் மரியுபோல் நகரில் ரஷ்யா மேற்கொண்டுள்ளது. இதனால் மரியுபோல் நகரமே உருக்குலைந்து சிதைந்து காட்சியளிக்கிறது. மரியுபோல் நகரில் 12 நாட்களாக நீடிக்கும் தாக்குதலில் 1,500 பேர் கொல்லப்பட்டதாக அந்நகர மேயர் தெரிவித்துள்ளார். இறந்த உடல்களை ஒட்டுமொத்தமாக புதைக்கும் பணிகளைக் கூட மேற்கொள்ள முடியாத அளவுக்கு தாக்குதல் தீவிரமாக நடப்பதாக மரியுபோல் நகர மேயர் தெரிவித்துள்ளார்.

மரியுபோலில், 34 குழந்தைகள் உட்பட 80க்கும் அதிகமானோர் தஞ்சமடைந்திருந்த மசூதி ஒன்றின் மீது ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது, துருக்கி நாட்டைச்சேர்ந்த இந்த 86 பேரும், ரஷ்யத்தாக்குதலில் இருந்து தப்பிக்க மசூதியில் தஞ்சமடைந்திருந்ததாக துருக்கி துதரகம் தெரிவித்துள்ளது. ஆயினும் உயிரிழப்பு விவரங்கள் தெரியவரவில்லை.

இதற்கிடையே ஒருவாரத்திற்கு மேலாக மின்சாரமின்றி, தண்ணீரின்றி மரியுபோல் நகரில் 4 லட்சத்துக்கும் அதிகமானோர் தவிப்பதாக உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி கூறியுள்ளார். மெலிட்டோபோல் நகர மேயர் இவான் ஃபெடோரோவை ரஷ்யா கடத்திவிட்டதாகவும், இது பயங்கரவாதத்தின் புதிய கட்டம் என்றும் செலன்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார். இதற்கிடையே தலைநகர் கீவைச் சுற்றி பல முனைகளில் இருந்தும் ரஷ்யப்படைகள் முன்னேறிக் கொண்டிருக்கின்றன. கீவை சுற்றி உள்ள நகரங்களில் ரஷ்யா தனது தாக்குதலை மும்முரமாக்கியுள்ளது. உக்ரைனின் முக்கிய தொழில் மையமான டினிப்ரோ நகரத்திலும் ரஷ்யாவின் தாக்குதல் தொடர்கிறது.

லீவிவ் நகரத்தில் விமான தாக்குதலுக்கான எச்சரிக்கை அலாரம் இருமுறை ஒலித்ததால் மக்கள் நிலவறைகளை தேடி விரைந்தனர். போலந்தை நோக்கி மக்கள் வெளியேறும் வழியாக உள்ள லீவிவ் நகரில் தாக்குதலுக்கான எச்சரிக்கை அலாரம் ஒலித்ததால் மக்களின் பதற்றம் அதிகரித்துள்ளது. வணிக தலங்கள் பலவும் மக்கள் தஞ்சமடையும் நிலவறையாக மாறியுள்ளன. இதேநேரத்தில், லீவிவ் அருகே உள்ள லட்ஸ் , இவானோ- பிரான்கிஸ்க் நகரங்களிலும் ரஷ்யாவின் தாக்குதல் விரிவடைந்துள்ளது.

17 ஆவது நாளாக நீடிக்கும் உக்ரைன்- ரஷ்யா போருக்கு மத்தியில், நேட்டோ நாடுகளுக்கு உதவும் வகையில் கூடுதல் அமெரிக்க வீரர்கள் ஐரோப்பாவுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இதன்படி ஜார்ஜியாவில் இருந்து, 130 வீரர்கள் ராணுவ விமானத்தில் புறப்பட்டுச்சென்றனர். இவர்கள் ஏற்கனவே ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான அமெரிக்கப்படைகளுடன் இணைந்து செயல்பட உள்ளனர். அமெரிக்காவின் ராணுவ நகர்வுகள், உக்ரைன், ரஷ்ய போரில் புதிய கேள்விகளை எழுப்பியுள்ளது