வட ஆப்பிரிக்காவில் மத்திய தரைகடல் பகுதியில் உள்ள நாடு லிபியா. இந்த நாட்டில் உள்ள பெங்காஸி என்ற சிமென்ட் நிறுவன ஆலையில், உத்தரப்பிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் வேலைக்குச் சென்றுள்ளனர். அவர்களை லிபிய நாட்டைச் சேர்ந்த துபாயை தளமாகக் கொண்ட ஒப்பந்ததாரர் ஒருவர் அழைத்துச் சென்றுள்ளார்.
இந்த நிலையில், அந்த சிமென்ட் தொழிற்சாலையில் 16 இந்திய தொழிலாளர்கள் சிக்கித் தவித்து வருகின்றனர். பெங்காஸி என்ற ஆலையில் பணிபுரிந்துவரும் இவர்கள், பணி நேரத்தைக் குறைப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, சமீபத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக, கடந்த நான்கு மாதங்களாக இவர்களுக்கு பல்வேறு துன்புறுத்தல்கள் இழைக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. சிறைவாசம் அனுபவிப்பது போன்ற சூழலை உருவாக்கி வருவதாக குற்றஞ்சாட்டியுள்ள அவர்கள், தங்களை மீட்டு இந்தியாவுக்கு அழைத்துச்செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசிடம் வலியுறுத்தி உள்ளனர்.
விசா, விமான டிக்கெட் முதலியவற்றுக்கு பணம் செலுத்தி அழைத்துச் சென்றுள்ள அந்த ஒப்பந்ததாரர், அங்குச் சென்றதும், அவர்களுடைய போன், பாஸ்போர்ட் உள்ளிட்ட உடைமைகள் பறித்துவைத்துள்ளார். ’சட்டப்பூர்வ அடையாள ஆவணங்கள் உங்களிடம் இல்லாததால் நீங்கள் உள்ளூர் காவல்துறையினரால் கைது செய்யப்படுவீர்கள்; மோசமான விளைவுகளைச் சந்திப்பீர்கள்’ என மிரட்டியும் அடித்தும் அவர்களை வேலை வாங்கியுள்ளனர்.
இதனால், அவர்கள் இந்தியாவில் தங்களது உறவினர்களைத் தொடர்புகொள்ள முடியாமல் சிக்கித் தவித்துள்ளனர். மேலும் அவர்களுக்கு முறையான சம்பளம் வழங்கப்படவில்லை எனவும் ஒப்பந்தத்தை மீறி தொடர்ந்து இரவுபகல் பாராது வேலை பார்த்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரம், கடந்த நவம்பர் மாதம் தெரியவந்தையடுத்து, உள்ளூர் இலாப நோக்கற்ற மனவ் சேவா சன்ஸ்தான் மூலம் வெளியுறவுத் துறை அமைச்சகத்திடம் மனு அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.