ஜெர்மனியில் இரண்டாம் உலகப் போரின் போது வீசப்பட்ட வெடிகுண்டை செயலிழக்க வைப்பதற்காக, சுமார் 16 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டனர்.
இரண்டாம் உலகப் போரின்போது அமெரிக்கா மற்றும் பிரிட்டன் படைகள் ஜெர்மனியில் ஏராளமான வெடிகுண்டுகளை வீசின. இதில் பல வெடிக்கவில்லை. இந்த குண்டுகள் மண்ணுக்குள் புதைந்துள்ளன. சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெடிக்காத குண்டுகள் அங்கு புதைந்து கிடைப்பதாகக் கூறப்படுகிறது. அவ்வப்போது இந்தக் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பிராங்பர்ட் நகரில் கட்டடம் கட்டும் பணிக்காக குழி தோண்டியபோது, சுமார் ஐநூறு கிலோ எடையுள்ள வெடிகுண்டு, கடந்த மாதம் கண்டுபிடிக்கப்பட்டது.
அதை செயலிழக்கச் செய்யும் பணிகள் நேற்று மேற்கொள்ளப்பட்டன. இதனால், அந்தப் பகுதியின் சுற்றுவட்டாரத்தில் வசிக்கும் சுமார், 16 ஆயிரம் பேர் வெளியேற்றப் பட்டனர். அந்தப் பகுதியில் ரயில் மற்றும் கார் சேவை மாற்றப்பட்டது. பிராங்பர்ட்டின் புகழ்பெற்ற மிருகக் காட்சி சாலையும் மூடப்பட்டது. பின்னர் அந்த வெடிகுண்டு செயலிழக்க வைக்கப்பட்டது.
கடந்த ஏப்ரல் மாதம் ரோஜன்ஸ்பர்க் பகுதியில் 250 கிலோ எடையுள்ள குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இதை செயலிழக்க செய்தபோது அது பயங்கரமாக வெடித்ததில் அருகில் உள்ள கட்டிடங்கள் சேதமடைந்ததை அடுத்து, இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.