உலகம்

தென்னாப்ரிக்கா: மதுபான பாரில் 5 பேர் கொண்ட கும்பல் துப்பாக்கிச் சூடு - 15 பேர் உயிரிழப்பு

ஜா. ஜாக்சன் சிங்

தென் ஆப்பிரிக்காவில் மதுபான விடுதி ஒன்றில் நேற்று நள்ளிரவு நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் 15 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் உள்ள கவுடெங் மாகாணத்தில் உள்ள சோவேட்டோ நகரில் ஒர்லாண்டோ ஈஸ்ட் என்ற பெயரில் மதுபான விடுதி ஒன்று இயங்கி வருகிறது. எப்போதுமே சனிக்கிழமை அன்று தென் ஆப்பிரிக்காவில் உள்ள மதுபான விடுதிகளில் கூட்டம் அதிக அளவில் காணப்படும். அதுபோலவே, நேற்றைய தினம் ஒர்லாண்டோ ஈஸ்ட் மதுபான விடுதியில் கூட்டம் நிரம்பியிருந்தது.

அப்போது நள்ளிரவு நேரத்தில் ஒரு காரில் வந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல், மதுபான விடுதிக்குள் அத்துமீறி நுழைந்து அங்கிருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டது. இந்தக் கொடூர சம்பவத்தில் 15 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். 9 பேர் படுகாயமடைந்தனர்.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்த போலீஸார், அங்கு வந்து காயமடைந்தவர்களை அருகில் உள்ள மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். இந்த தாக்குதலை நடத்தியது யார், தீவிரவாத கும்பலைச் சேர்ந்தவர்களா என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உலகிலேயே தென் ஆப்பிரிக்காவில் தான் அதிக அளவில் வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அங்கு ஆண்டுதோறும் 20 ஆயிரம் பேர் வன்முறைச் சம்பவங்களுக்கு உயிரிழந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.