பட்டினியில் வாடும் காசா குழந்தைகள் web
உலகம்

’கொடூரத்தின் உச்சம்..’ - காசாவில் நிவாரண உதவிக்காக காத்திருந்த 1,373 மக்கள் கொலை!

காசாவில் நிவாரண பொருட்களை பெருவதற்காக காத்திருந்த ஆயிரத்து 300-க்கும் மேற்பட்ட மக்கள் கொலைசெய்யப்பட்டதாக ஐநா தெரிவித்துள்ளது.

PT WEB

உணவு இல்லை. தண்ணீர் இல்லை. மருந்து இல்லை... கண் முன்னே குழந்தை பசியில் துடிக்கிறது... வயதான பெற்றோர் உணவின்றி மூலையில் சுருண்டு கிடக்கின்றனர்... எங்கு திரும்பினாலும் அழிமானங்கள்... நரக வாழ்வை வாழ்கின்றனர் காஸா மக்கள்.

2023 அக்டோபர் 7 தொடங்கியது இஸ்ரேல் - ஹமாஸ் கிளர்ச்சியாளர்கள் இடையேயான போர். இந்த போரில் ஹமாஸ் கிளர்ச்சியாளர்களை நோக்கி வைக்கப்பட்ட குறிக்கு பெரும்பாலும் இரையானது பொதுமக்கள்தான். குறிப்பாக குழந்தைகள், பெண்கள்தான் அதிகம் கொல்லப்பட்டனர். இது இஸ்ரேலின் போர் உத்தி என குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில், பலியானவர்கள் எண்ணிக்கை 60 ஆயிரத்தைக் கடந்திருப்பதாக காசா சுகாதார அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

காசா மக்கள்

அதுமட்டுமில்லாமல் இஸ்ரேல் ராணுவ தாக்குதலில் இறந்த 60 ஆயிரம் பேரில் பாதி பேர் பெண்கள் மற்றும் குழந்தைகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பட்டினி, ஊட்டச்சத்து குறைபாடு, மற்றும் நோய்கள் பரவலாகி உயிரிழப்புகள் அதிகரித்து வருவதாகவும், இது இந்த நூற்றாண்டில் கணாத மாபெரும் பேரழிவு எனவும் உலக உணவுத் திட்டத்தின் அவசரகால இயக்குநர் உருக்கமாகத் தெரிவித்துள்ளார். நாளுக்கு நாள் நிலைமை மோசமடைந்துவரும் நிலையில், உலகம் வேடிக்கை மட்டுமே பார்த்துவருகிறது.

இந்நிலையில் கொடூரத்தின் உச்சமாக நிவாரண பொருட்களுக்காக காத்திருந்த 1000-க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டதாகவும், இஸ்ரேல் பசி, பட்டினியை ஆயுதமாக பயன்படுத்துவதாகவும் ஐநா தெரிவித்துள்ளது.

நிவாரண பொருட்களுக்கு காத்திருந்த மக்கள் கொலை!

காசாவில் நிவாரண உதவிகளைப் பெற காத்திருந்த பாலஸ்தீனர்கள் ஆயிரத்து 300க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது.

காசா

இதுகுறித்து ஐநா மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், கடந்த மே 27ஆம் தேதி முதல் இதுவரை ஆயிரத்து 373 பேர் உயிரிழந்துள்ளதாகவும், கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 105 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலானோர் இஸ்ரேல் படைகளால் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள ஐநா ஆணையம், பசி, பட்டினியை போர் ஆயுதமாக இஸ்ரேல் படைகள் பயன்படுத்திவருவதாக குற்றஞ்சாட்டி உள்ளது.