உலகம்

போர்க்கப்பல் ஊடுருவல்: சரணடைய மறுத்த உக்ரைன் வீரர்களை கொன்ற ரஷ்யா

JustinDurai

துருக்கி கடற்பகுதியில் போர்க்கப்பல்கள் மூலம் ஊடுருவிய ரஷ்ய வீரர்கள், 13 உக்ரைன் வீரர்களை சுட்டுக் கொன்றனர்.   

உக்ரைன் மீது ரஷ்யா நேற்று தனது தாக்குதலை தொடங்கியது.  இன்று 2வது நாளாகவும் போர் நீடிக்கிறது. அந்த நாட்டின் விமானப்படை, கடற்படை, ராணுவ தளங்கள் மற்றும் ஆயுதக் கிடங்குகளை குறிவைத்து ரஷ்ய போர் விமானங்கள் குண்டுமழை பொழிந்து வருகின்றன. ஏவுகணை தாக்குதலும் நடத்தப்படுகிறது.

உக்ரைன் தலைநகர் கீவ் பகுதிகளை ரஷ்ய ராணுவம் கைப்பற்றியுள்ளது. தலைநகரில் ரஷ்ய போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் பறப்பதால் அங்கு வசிக்கும் மக்கள் அவசரமாக வெளியேறி வருகின்றனர்.

இந்த நிலையில் ஒடெசா பிராந்தியத்தில் உள்ள கடற்பகுதியில் போர்க்கப்பல்கள் மூலம் ஊடுருவிய ரஷ்ய வீரர்கள், அங்கிருந்த உக்ரைன் வீரர்களை சரணடையும்படி எச்சரித்தனர். ஆனால் அவர்கள் சரணடைய மறுத்ததால், ரஷ்யப் படையினர் துப்பாக்கித் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் 13 உக்ரைன் வீரர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.  
உக்ரைன் மீதான ரஷிய படைகள் தாக்குதல் மிக மோசமான உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருவதாக ஐ.நா மனித உரிமை ஆணையம் கவலை தெரிவித்துள்ளது. உக்ரைனில் இருந்து அகதிகளாக வரும் மக்களை வரவேற்கத் தயார் என்று அமெரிக்க வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. உக்ரைனில் 20,000 இந்தியர்கள் உள்ளனர். அவர்களில் கடந்த சில தினங்களில் 4,000 பேர் மீட்டு வரப்பட்டனர்.

இதையும் படிக்கலாம்: உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை ஏன்? - அதிபர் புடின் விளக்கம்