உலகம்

கோலாலம்பூர் நிலச்சரிவு விபத்து: பலி எண்ணிக்கை தொடர்ந்து உயர்வு

webteam

மலேசிய தலைநகர் அருகே இன்று அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 13 பேர் உயிரிழந்தனர்.

மலேசிய தலைநகர் கோலாலம்பூரின் புறநகர் பகுதியில் உள்ள முகாம் ஒன்றில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி தற்போது வரை 13 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் பலரை காணவில்லை என்றும் அந்நாட்டு காவல்துறை தெரிவித்துள்ளது. நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரவமாக நடைபெற்று வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து நிகழ்ந்த போது சம்பவ இடத்தில் 80க்கும் மேற்பட்டோர் இருந்ததாக கூறப்படுகிறது.

நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்க தீயணைப்புத் துறை, தன்னார்வ தீயணைப்பு சங்கம் மற்றும் அந்நாட்டு காவல்துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். நிலச்சரிவின் உயரம் 30 மீட்டர் உயரத்தில் 3 ஏக்கர் நிலப்பரப்பில் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

அதிகாலை 2:24 மணிக்கு நிகழ்ந்த நிலச்சரிவு குறித்து பேரிடர் மீட்பு குழுவிற்கு அழைப்பு வந்ததாகவும், 3 மணி அளவில்  மீட்பு குழு சம்பவ இடத்திற்கு சென்றடைந்ததாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர். இந்த சம்பவத்தை அடுத்து,  விபத்து நடந்த பகுதியில் உள்ள நெடுஞ்சாலை மூடப்படுவதாகவும்,  பொதுமக்கள் யாரும் அங்கு அடுத்த உத்தரவு வரும் வரை செல்ல வேண்டாம் என அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது.