உலகம்

துருக்கி: 128 மணி நேரம் இடிபாடுகளில் சிக்கியிருந்த 2 மாத குழந்தை பாதுகாப்பாக மீட்பு!

நிவேதா ஜெகராஜா

28,000-த்துக்கும் மேலான மரணங்கள், 6,000-த்துக்கும் மேலான கட்டட இடிபாடுகள், பல்லாயிரக்கணக்கான தொடர் மீட்பு பணிகள் என துருக்கியில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த திங்கட்கிழமை (பிப்ரவரி 6) ஏற்பட்ட பயங்கர பூகம்பத்தில் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 28 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள துருக்கியியில் கட்டிட இடிபாடுகளில் இருந்து இறந்தவர்களின் உடல்கள் தொடர்ந்து மீட்கப்பட்டு வருகின்றன. இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. உயிருடன் மீட்கப்பட்ட ஆயிரக்கணக்கானோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்

இந்நிலையில், 2 மாத கைக்குழந்தையொன்று இடிபாடுகளிலிருந்து பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. சுமார் 128 மணி நேரத்துக்குப் பின்னரும்கூட குழந்தை உயிருடன் இருப்பதை கண்டு அங்கிருந்த பலரும் ஆச்சர்யத்திலும் மகிழ்ச்சியிலும் மூழ்கியுள்ளனர்.

தொடர்ந்து ஆயிரக்கணக்கான மீட்புப் பணியாளர்கள் களத்தில் போராடி வருகின்றனர். நேற்று முன்தினம் வெளியான ஒரு செய்தியில், கஹ்ராமன்மாராஸ் பகுதியில் பூகம்பத்தின் கோரத்தாண்டவத்தை பதிவு செய்து கொண்டிருந்த மூத்த புகைப்படக் கலைஞரான ஆடெம் அல்டான், இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த தனது மகளின் கையை விடாமல் பிடித்திருந்த தந்தையை புகைப்படம் எடுத்திருந்தார். அப்புகைப்படம், பார்ப்போரையும் கண்கலங்க வைத்திருந்தது. அப்படியான சோகங்களுக்கு இடையேதான் தற்போது ஐந்து நாள்களுக்குப் பிறகு இக்குழந்தை உயிருடன் மீட்கப்பட்டுள்ள செய்தி வெளியாகியுள்ளது.

இதுபோல நிலநடுக்கத்திற்குப் ஐந்து நாட்களுக்குப் பிறகு மீட்கப்பட்டவர்களில் இரண்டு வயது சிறுமி, ஆறு மாத கர்ப்பிணிப் பெண் மற்றும் 70 வயதுப் பெண் ஒருவரும் அடங்குவதாக துருக்கிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.