இஸ்ரேல் - பாலஸ்தீனியர்கள் இடையேயான சண்டையால் ஏற்பட்டுள்ள உயிரிழப்பு தொடர்பான தகவல்கள் பதறவைக்கும் வகையில் இருக்கின்றன. இந்த நிலையில் ஐநா மன்றத்தில் மோதல் தொடர்பாக பேச்சுவார்த்தை நடக்க இருப்பது, பிரச்னைக்கான தீர்வை நோக்கிய சிறு நம்பிக்கையையும் ஏற்படுத்திகின்றது.
இஸ்ரேல் - பாலஸ்தீனம் பிரச்னை, மீண்டும் உலக நாடுகளில் பேசுபொருளாகி ஆகியிருக்கிறது. சில தினங்கள் முன் இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினருக்கும் ஹமாஸ் என்ற போராளிக் குழுவினருக்கும் இடையிலான தொடர்ச்சியான மோதல்தான், மொத்த பிரச்னைக்கும் தொடக்கமாக அமைந்தது. கடந்த திங்கட்கிழமை, ஜெருசலேமில் உள்ள அல் - அக்சா மசூதிக்கு வெளியே இஸ்ரேலிய காவல்துறையிருடன் நடைபெற்ற மோதலில் 300 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் காயமடைந்ததே இந்த மோதலின் தொடக்கமாக பார்க்கப்படுகிறது. பல வாரங்களாக தொடர்ந்த இந்த வன்முறையின் அடுத்தகட்டமாகவே துப்பாக்கிச்சூடு, ஏவுகணை தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
இதற்கிடையே, தொடர் கதையாகி இருக்கும் இந்த மோதலால் கடந்த சில நாட்களில் மட்டும் மொத்தம் 119 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மோதல் ஆரம்பித்த கடந்த திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை மட்டுமே இந்த எண்ணிக்கை என்று காசா சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. இதில் கூடுதல் சோகம் தரக்கூடிய விஷயம், இந்த மோதலில் கொல்லப்பட்டுள்ள குழந்தைகளின் எண்ணிக்கை தான். இறந்த இந்த 119 பேரில் மொத்தம் 31 குழந்தைகள் அடக்கம்.
வழக்கம் போல மோதலில் பாலஸ்தீனத்துக்கே பாதிப்பு அதிகம் என்றும் கூறப்பட்டுள்ளது. இஸ்ரேல் தரப்பில் ஒரு குழந்தை, ஓர் இந்தியப் பெண் செவிலியர் உட்பட ஏழு பேர் மட்டுமே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுவே, பாலஸ்தீனத் தரப்பில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகின்றன.
உயிரிழப்பை அடுத்து, மொத்தம் 830-க்கும் அதிகமானோர் இருதரப்பு மோதலில் காயமடைந்துள்ளனர். நேற்று ரம்ஜான் நாளன்றும் தாக்குதல் சம்பவங்கள் தொடர்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. ஏவுகணை தாக்குதல்கள், துப்பாக்கிச் சூடு சம்பவங்களை தாண்டி வெறுப்பு காரணமாக இஸ்ரேல் நாட்டுக்குள்ளும் பல்வேறு இடங்களில் யூதர்களும் இஸ்லாமியர்களும் ஒருவருக்கொருவர் தாக்கிக்கொண்டு கலவரங்களில் ஈடுபட்டுவருகின்றனர்.
தொடர்ந்து அதிகரித்து வரும் மோதல் காரணமாக அங்கு அச்சம் நிலவி வருகிறது. இதற்கிடையே, இஸ்ரேல்-பாலஸ்தீன விவகாரம் குறித்து,நாளை ஐ.நா சபையின் பாதுகாப்பு மன்றம் ஆலோசனைக் கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது. இதில் நடக்கும் பேச்சுவார்த்தையும் மூலம் போர் நிறுத்தம் கொண்டுவரப்படுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.