ஸ்வீடன் நாட்டில் 113 ஆண்டுகள் பழைமை வாய்ந்த தேவாலயம் நவீன தொழில்நுட்ப உதவியுடன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இரும்புத் தாதுக்கள் அப்பகுதியில் கிடைப்பதால், இந்த தேவாலயம் வேறொரு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. 500 மில்லியன் குரோனர் செலவில், 5 கிலோ மீட்டருக்கு அப்பால் இந்த தேவாலயம் கொண்டு செல்லப்பட்டிருப்பது இணையத்தில் பேசுபொருளாகி உள்ளது. இதுகுறித்த கட்டுரையை இங்கு படிக்கலாம்.
நவீன உலகில் எல்லாமே மாற்றம் பெற்று வருகிறது. அதிலும், மிகவும் பழைமையான கட்டடங்கள், வீடுகள் எல்லாம் சிறு சேதாரமின்றி, ஓரிடத்திலிருந்து அப்படியே வேறு இடத்திற்கு மாற்றம் செய்யப்படும் செய்திகள் பற்றிக் கேட்கும்போது ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது. அந்த வகையில் ஸ்வீடன் நாட்டில் 113 ஆண்டுகள் பழைமை வாய்ந்த தேவாலயம் நவீன தொழில்நுட்ப உதவியுடன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஐரோப்பிய நாடான ஸ்வீடனின் வடக்கே கிருனா நகர் உள்ளது. இந்த நகருக்கு அருகே பூமிக்கு அடியில், 4,000 அடி ஆழத்தில் மிகப்பெரிய அளவில் இரும்புத் தாதுக்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த தாதுக்கள், ஐரோப்பாவில் 80 சதவிகிதத்தை வழங்கும் எனக் கருதப்படுகிறது. 1890களில் இருந்து, அரசுக்குச் சொந்தமான நிறுவனம் இந்தப் பகுதியிலிருந்து சுமார் 2 பில்லியன் டன் தாதுவை பிரித்தெடுத்துள்ளது. மேலும், அருகிலுள்ள ஸ்வப்பாவாரா மற்றும் மால்ம்பெர்கெட்டுடன் சேர்த்து கிருனாவில் மீதமுள்ள கனிம வளங்கள் சுமார் 6 பில்லியன் டன்கள் இருக்கும் என்று கருதப்படுகிறது. தவிர, இது இன்னும் பல ஆண்டுகளுக்கு இயங்க வைக்கக்கூடியது என்று சொல்லப்படுகிறது. இதையடுத்து, இந்த நகரில் உள்ள வீடுகள் உள்ளிட்டவற்றை, அருகே புதிதாக உருவாக்கப்பட்ட நகருக்கு மாற்றும் பணி நடைபெற்றது.
30 ஆண்டுகாலமாக தொடங்கும் இந்தப் பணியில், இங்கு வசித்த 18,000 மக்களும் புதிய நகருக்குப் பயணமாகியுள்ளனர். அதேபோல் அவர்களுடைய வீடுகளும் புதிதாகக் கட்டப்பட்டுள்ளன. இந்த நிலையில், 1912ஆம் ஆண்டு கட்டப்பட்ட 672 டன் எடையுள்ள பழைய ஸ்வீடிஷ் லூத்தரன் தேவாலயம் அப்படியே இடமாற்றம் செய்யப்படுகிறது. அதன் அடித்தளத்திலிருந்து தூக்கி, சிறப்பாக வடிவமைக்கப்பட்ட டிரெய்லரில் வைக்கப்பட்டுள்ளது. ரிமோட் கண்ட்ரோல் பிளாட்பெட் டிரெய்லர்களில் ஐந்து கிலோமீட்டர் (மூன்று மைல்) தூரம் கொண்டு செல்லப்படும் இந்த நடவடிக்கையானது, மணிக்கு அரை கிலோமீட்டர் வேகத்தில் நடைபெற்றது.
இறுதியில், தேவாலயம் சுமார் 5 கிலோமீட்டர் (3 மைல்) தொலைவில் கிழக்கே உள்ள புதிய நகர மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. மேலும், தேவாலயத்தை நகர்த்துவதற்கு மட்டும் 500 மில்லியன் குரோனர் ($52 மில்லியன்) செலவாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இந்தத் தேவாலயத்தை அப்படியே நகர்த்துவதற்கு புதிய பாதையே தயார் செய்யப்பட்டுள்ளது. டிரெய்லர்கள் சீராக நகரும் வகையில் சாலைகள் ஒன்பது மீட்டரிலிருந்து 24 மீட்டராக அகலப்படுத்தப்பட்டு சமதளமாக்கப்பட்டுள்ளன. இந்தப் பணியே கடந்த ஒரு வருடமாக நடைபெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. தவிர, இந்தப் பணியை 10,000க்கும் மேற்பட்டோர் கண்டு ரசித்ததாகக் கூறப்படுகிறது.