chroming challenge
chroming challenge  face book
உலகம்

TikTok Challenge-ஆல் உயிரிழந்த 11 வயது சிறுவன்; மாரடைப்பு ஏற்பட்டது ஏன்? நடந்தது என்ன?

ஜெனிட்டா ரோஸ்லின்

இன்றைய தேதியில் சமூக ஊடகங்களின் பயன்பாடு உயர்ந்துள்ளது. அதில் காட்டும் ரீல்ஸ், கேம் போன்றவற்றை காண்பதும் ட்ரெண்ட் / சேலஞ்ச் என்ற பெயரில் அதை அப்படியே செய்வதும் சிறியவர் முதல் பெரியவர் வரை எல்லா தரப்பினரும் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. இப்படி ட்ரெண்டின் மீது கொண்ட மோகமானது இறுதியில் உயிரை பறித்துவிடும் அளவிற்கு அபாயத்தினை கொண்டதாக மாறிவிடுகிறது.

அப்படித்தான் பிரிட்டனில் ஒரு 11 வயது சிறுவன் செய்த செயல் அவரின் உயிரையே பறித்துள்ளது.

யுனைடெட் கிங்டம், லான்காஸ்டரில் 11 வயது நிரம்பிய Tommie-Lee Gracie Billington என்ற சிறுவன், டிக்டாக்கில் பிரபலமான “குரோமிங் சேலஜ்” என்ற விளையாட்டினை தனது நண்பரின் வீட்டில் விளையாடியுள்ளார்.

குரோமிங் சேலஜ் எனப்படுவது, வீட்டில் உள்ள தின்னர், வார்ணிஷ், நெயில் பாலிஷ், பெயிண்ட் உள்ளிட்ட பொருட்களை நுகர்ந்து பார்ப்பது. 'ஹஃபிங்' என்றும் அழைக்கப்படும் குரோமிங், நச்சுப் பொருட்களிலிருந்து வரும் புகையை உள்ளிழுப்பதை குறிக்கிறது. இந்த நச்சு ரசாயனங்களை உள்ளிழுப்பது நரம்பு மண்டலத்தை பாதித்து பேச்சு மந்தம், தலைச்சுற்றல் மற்றும் மரணத்திற்கு கூட வழிவகுக்கும்.

இப்படியான குரோமிங் சேலஜை செய்துள்ளார் இச்சிறுவன். இதன்பிறகு சிறுவன் மயக்கம் அடைந்து கீழே விழுந்துள்ளார். இதனையடுத்து சிறுவன் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் ஏற்கனவே அவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது அவரின் குடும்பத்திலும், அப்பகுதியிலும் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

குரோமிங் சேலஜ்ஜால் ஏற்பட்ட மரணங்கள்! 

குரோமிங் சேலஜ் எனப்படும் இந்த டிரெண்டிங்கானது, UK வில் டிக்டாக் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பே 2018 ஆம் ஆண்டே பிரபலமான ஒன்று என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விளையாட்டினால் ஏற்பட்ட உயிரிழப்பு என்பது இது முதல் முறை அல்ல, கடந்த ஆண்டே, ஆஸ்திரேலியாவிலும் 13 வயது சிறுமி ஒருவர் இந்த சவாலில் நண்பர்களுடன் இதில் பங்கேற்றபோது மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மொபைல் போன்கள்

குறிப்பு: சமூக ஊடகங்கள் நம் பொழுதுபோக்கிற்கு மட்டுமே.. வேலைகளையெல்லாம் முடித்துவிட்டு கிடைக்கும் ஓய்வு நேரத்தில் இந்த பொழுது போக்கு அம்சங்களை பயன்படுத்தலாமே தவிர பொழுது முழுவதும் போக்குவதற்காகவே இதனை பயன்படுத்தி அடிமையாகி விடக்கூடாது. மேலும், மேற்கூறிய விளையாட்டு என்பது உயிரை பறிக்கும் ஒன்று என்று தெரிந்தே அதனை டிரெண்டாக மாற்றுபவர்கள் மிகவும் கண்டனத்திற்கு உரியவர்கள்.

அளவு அறிந்தும், தேவை அறிந்தும், அதன் வீபரீதம் அறிந்துமே பெற்றோர்கள் குழந்தைகளுக்கு செல்போன் பயன்பாட்டை கொடுக்க வேண்டும் என்பதும் முக்கியமான ஒன்று. அதையும் நாம் உணர வேண்டும்.