உலகம்

கலிஃபோர்னியா மாகாணத்தில் கட்டுக்கடங்காத காட்டுத்தீ : 10க்கும் மேற்பட்டோர் பலி

webteam

கொரோனா வைரஸுடன் போராடி வரும் அமெரிக்கா மக்களுக்கு காட்டுத்தீயும் பெரும் இன்னலை சேர்த்துள்ளது. நரகத்தில் வாழ்வதை போல இருப்பதாக மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கட்டுக்கடங்காமல் காட்டுத்தீ பற்றி எரிகிறது. ஆண்டுதோறும் இங்கு காட்டுத்தீ ஏற்படுவது வழக்கம் தான் என்றாலும் இந்த ஆண்டு வரலாறு காணாத வகையில் தீ பரவி வருகிறது. மாகாணத்தில் 25க்கும் அதிகமான இடங்களில் தீப் பற்றியுள்ளது. இந்த தீ அப்படியே வாஷிங்டன், ஓரிகான் உள்ளிட்ட மாநிலங்களுக்கும் பரவியுள்ளது.

அமெரிக்காவின் மேற்குப் பகுதியில் உள்ள நகரங்கள் எல்லாம் சூரிய வெளிச்சமே தெரியாத அளவு புகை சூழ்ந்துள்ளது. ஆரஞ்சு மற்றும் சிவப்பு வண்ணத்தில் தகிக்கும் வானத்தை வாழ்நாளில் கண்டதில்லை என்கின்றனர் அப்பகுதி மக்கள். ஏற்கனவே கலிஃபோர்னியா மாகாணத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக இருக்கும் நிலையில் காட்டுத்தீயும் மக்களை வாட்டத் தொடங்கியுள்ளது.

3 வாரமாக பற்றி எரியும் தீயால், 23 லட்சம் ஏக்கர் வனப்பகுதி தீக்கிரையாகியுள்ளது. தீயில் இருந்து தப்பிச் செல்ல முயன்ற போது தீயில் கருகி 10க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளன. 14 ஆயிரம் வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர். நரகத்தில் வாழ்வதை போல இருப்பதாக வேதனை தெரிவிக்கும் மக்கள், உடைமைகளையும் வீடுகளையும் இழந்து செய்வதறியாது தவித்து வருகின்றனர். காட்டுத்தீயால் ஏற்பட்டுள்ள புகையால் பல நகரங்களில் காற்று மாசடைந்துள்ளது.